வேலூரில் சிகிச்சை பெற வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக 250 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி: ரூ.240.54 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வேலூரில் சிகிச்சை பெற வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக 250 படுக்கை வசதிகளுடன் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என்று ரூ.240.54 கோடியில் கட்டப்பட்டட உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி கலைஞர் நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்கள் பயன்பாட்டுக்கான திறந்து வைக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த மருத்துவமனை, ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று அழைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6 மணிக்கு திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: ஒரு மனிதரின் வாழ்க்கை என்பதை அவரது மரணத்துக்கு பிறகு கணக்கிட வேண்டும். இதை சொன்னது கலைஞர். அந்த வகையில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, மறைந்த பிறகும் தமிழ் சமுதாயத்துக்கு பயன்பட்டு கொண்டிருக்கிறார். இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இப்போதும் இருந்து ஒரு மாபெரும் மருத்துவமனையை வாங்கி கொடுத்திருக்கிறார் தலைவர் கலைஞர். இந்த வளாகத்துக்கு கிங் இன்ஸ்டிடியூட் என்று பெயர். இதுவும் பொருத்தமானதுதான். கலைஞர் என்றாலே கிங்தான். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருந்தவர். அந்த வகையில் கிங் ஆராய்ச்சி வளாகத்துக்கு இதனைவிட பொருத்தமான பெயரும் இருக்க முடியாது. 15 மாதத்தில், மறுபடியும் சொல்கிறேன் 15 மாதத்தில், மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் 15 மாதத்தில் இந்த மருத்துவமனையை கட்டி இருக்கிறோம். இதுதான் மிக முக்கியமான சாதனை.

அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி இருக்கிறோம். மக்களுக்கு உண்மையான சேவை நோக்கத்தோடு திட்டங்களை தீட்டுபவர்களுக்கும், மக்களை ஏமாற்றும் வகையில் திட்டங்களை அறிவிப்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 2021ம் ஆண்டு மே 7ம் தேதி திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக அரசு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் முக்கியமான தென்சென்னையில், ரூ.250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்பதாகும். மருத்துவமனைக்காக 4.89 ஏக்கர் நிலம் சென்னை, கிங் மருத்துவமனை வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டது. 500 படுக்கைகள் என்ற எண்ணிக்கையை பின்னர் 1000 என்று உயர்த்தினோம். 2022ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி நான் அடிக்கல் நாட்டினேன்.

இது 2023 ஜூன் மாதம். அதாவது மொத்தம் 15 மாதத்திற்குள் இந்த மருத்துவமனை கட்டி எழுப்பட்டுள்ளது. கலைஞர் பெயரால் அமைந்த நூலகத்தை அடுத்த மாதம் மதுரையில் திறக்க இருக்கிறோம். இன்றைய தினம் அவர் பெயரால் மருத்துவமனை திறக்கப்படுகிறது. நாட்டிலேயே 36 அரசு மருத்துவ கல்லூரிகளோடு, இந்த கல்லூரிகளில் சுமார் 5,050 எம்பிபிஎஸ் இடங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கலைஞரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றினார். அவர் வழியில் நாங்களும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மைகளை செய்ய நினைக்கும்போதெல்லாம் அதற்கு ஒரு இடைஞ்சலை ஏற்படுத்தி நம்மை திசைதிருப்பி நம்மை தடுக்க பார்ப்பார்கள். அதற்காக டைவட் ஆக மாட்டோம். மக்கள் நலன் ஒன்றே இலக்கு என்ற நேர் வழியில் பயணிப்போம்.

இன்று திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையாக இருந்தாலும், அடுத்த மாதம் திறக்கப்படும் நூலகமாக இருந்தாலும் கலைஞரின் பெயரால் அமைவதே பொருத்தமானது. இதனை திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பு என்பது என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருப்பது மாபெரும் பேராக கருதுகிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, கலைஞரின் மகன் என்ற பூரிப்பு உணர்வோடு இதை திறந்து வைத்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். வேலூர் மாவட்டத்தில், சிஎம்சி போன்ற பல்வேறு மருத்துவமனைகள் இயங்கி கொண்டு இருக்கிறது.

அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பொருளாதார வசதி இல்லாதவர்கள் சிகிச்சை வரும் காரணத்தினால் அவர்களுடன் வருகிறவர்கள் வேலூரில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வாடகைக்கு அறை கிடைப்பதில் என்று அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சத்துவாச்சேரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதல் 250 படுக்கை வசதிகள் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

* உலக தரத்தில் 6 மாடி கொண்ட மருத்துவமனையில் உள்ள வசதிகள்
6 தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனை வளாகம் 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ-புறநோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் நிர்வாக கட்டிடம். பி-அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு. சி-எக்ஸ்ரே மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு என அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளம் – மருந்துகள் சேமிப்பு அறை. தரைதளம் – அவசர சிகிச்ைச பிரிவு. முதல்தளம் – அறுவை சிகிச்சை வார்டுகள். 2வது தளம் – பொது வார்டு, அறுவை சிகிச்சை அரங்குகள். 3வது தளம் – புற்றுநோய் மருத்துவ சிகிச்சை பிரிவு. 4வது தளம் – தனி அறைகள், ரத்த வங்கி. 5வது தளம் – மயக்க மருந்தியல் பிரிவு, 6வது தளம் – தொடர் சிகிச்சைக்கான வார்டுகள். 10 அறுவை சிகிச்சை அரங்குகள், உயர்தர ஆய்வகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், 10 மின்தூக்கிகள், சலவை கூடங்கள், உணவகங்கள், தீ தடுப்பு கருவிகள் என நவீன வசதிகளுடன் உலக தரத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மிகமிக பிரமாண்டமானதாக கட்டி தந்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவையும், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். உலக தரத்துக்கு கட்ட வேண்டும் என்பதற்காக வாரந்தோறும் இங்கு வந்து, செதுக்கி, செதுக்கி மக்கள் நல்வாழ்வு கோட்டையாக எழுப்பி காட்டி இருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. ஏவாமலே பணியாற்றக் கூடியவர் என்று கலைஞரே பாராட்டியுள்ளார். செயல்படுவதில் மாரத்தான் மந்திரி என்று சொன்னால் நம்முடைய மா.சு. தான். இவர்கள் இருவரும் சேர்ந்து கலைஞர் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். பொதுப்பணி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், இதனை கட்டி தந்துள்ள கட்டுமான நிறுவனம், அதனுடைய பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

* 15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’!We are delivering on our aims!

The post வேலூரில் சிகிச்சை பெற வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக 250 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி: ரூ.240.54 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: