ஜிஎஸ்டி, பஞ்சு விலை உயர்வால் தூங்கும் ஜவுளி தொழில் ஒரு நாளைக்கு ரூ.100 கோடி பிசினஸ் அவுட்: ஒன்றிய அரசின் திறனற்ற நிர்வாகத்தால் 8 ஆண்டுகளாக முடங்கிய ஏற்றுமதி

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் பஞ்சு விலை ஏறாமல் இருந்ததால் ஜவுளி உற்பத்தி நல்லமுறையில் இருந்தது. அதற்கு ஏற்ப ஏற்றுமதியும் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.54 ஆயிரத்திற்கு விற்றது. பருத்தி விளைச்சல் குறைந்ததால் பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது. இதனால் நூல் மில்களில் நூல்களின் உற்பத்தி குறைந்ததால், மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தி 50 முதல் 60 சதவீதம் வரை சரிந்தது.

பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள், மில் அதிபர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். ஆனால் அதற்கு மாறாக பஞ்சு விலை மீண்டும் ஏறியது. பின்னர் பருத்தி விளைச்சல் அதிகரிப்பால் கடந்தாண்டு பிப்ரவரியில் மீண்டும் பஞ்சு விலை குறைய தொடங்கியது. அப்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.80 ஆயிரம் ஆனது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.72 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை சரிந்து வருவதால் கடந்த சில மாதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் ஜவுளி உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லாததால் ஜவுளிகள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து வெண்ணந்தூர் விசைத்தறி சங்க பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் டவல், கேரளா வேஷ்டி, சேலை, அபூர்வா சேலை, காட்டன் சேலை, வேஷ்டி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பில் ஜவுளி உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த மூன்று மாதமாக எப்போதும் இல்லாத அளவில் ஜவுளி தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆட்டோ லூம்ஸ் எனப்படும் நவீன விசைத்தறிகளில் உள்நாட்டுக்கு தேவையான சேலை, டவல் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சாதாரண விசைத்தறியாளர்கள் தாக்கு பிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஜவுளி ஏற்றுமதியை ஒன்றிய அரசு முறைப்படுத்தாததே இதற்கு முக்கிய காரணம். கடந்த 9 ஆண்டுகளாக ஜவுளி ஏற்றுமதி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி என்பது முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது.

சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் செய்த பலர், மாற்றுத்தொழிலுக்கு போய்விட்டனர். தொழில் இல்லாததால் பல இடங்களில் விசைத்தறி கூடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சிலர் விசைத்தறிகளை பழைய இரும்பு கடைகளில் எடைக்கு விற்கின்றனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல கோடி மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில் ஜவுளி ஏற்றுமதி வெறும் 4 சதவீதம் மட்டுமே உள்ளது. 2017ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது.

ஜிஎஸ்டியால் 20 முதல் 25 சதவீதம் ஜவுளி விலை அதிகரித்துள்ளது. ஒரு கோடி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. எனவே ஜவுளி துறைக்கு என்று தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதி செய்வதை தவிர்க்கவேண்டும். ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க தனி கவனம் செலுத்த வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் விசைத்தறி தொழில் பெரும் அபாயத்தை சந்திக்கும். இதை உணர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிங்காரம் கூறினார்.

The post ஜிஎஸ்டி, பஞ்சு விலை உயர்வால் தூங்கும் ஜவுளி தொழில் ஒரு நாளைக்கு ரூ.100 கோடி பிசினஸ் அவுட்: ஒன்றிய அரசின் திறனற்ற நிர்வாகத்தால் 8 ஆண்டுகளாக முடங்கிய ஏற்றுமதி appeared first on Dinakaran.

Related Stories: