சேலம் மாவட்ட காவல்துறையில் கருமலைக்கூடல், மேச்சேரி ஸ்டேஷன்களில் டிஜிபி ஆய்வு

சேலம், ஜூன் 13:சேலம் மாவட்டம் கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று திடீரென டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் 3 நாட்கள் முகாமிட்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் மாவட்டம், மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், சேலத்தில் தொடர்ந்து தங்கி இருந்த டிஜிபி சைலேந்திரபாபு, மாநகரில் உள்ள அழகாபுரம், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

நேற்று காலை, சேலம் மாவட்டம் மேட்டூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷனுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சென்றார். அங்கு வரவேற்பாளர் பணியில் இருந்த பெண் காவலரிடம் புகார் கொடுக்க வரும் மக்களின் நிலை குறித்து கேட்டறிந்ததோடு, அவர் பராமரித்து வந்த பதிவேட்டை பார்வையிட்டார். அப்போது அவர், ‘‘தனக்கு நேர்ந்த குறையை தீர்க்கக்கோரி காவல்நிலையத்திற்கு வரும் மக்களிடம் அன்போடும், கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் புகார்களை காது கொடுத்து கேட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வழக்கு விபர பதிவேடுகளை டிஜிபி ஆய்வு செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர் சுகுமார் உடன் இருந்து விளக்கம் அளித்தார். பின்னர் பதிவேடுகளை முறையாக பராமரித்ததற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தருக்கு வெகுமதி வழங்கினார். பின்னர் மேச்சேரி காவல்நிலையத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு சென்றார். அங்கும் வரவேற்பாளர் செயல்பாடு, வழக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதில், அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிப்பதை பாராட்டி, போலீசாருக்கு வெகுமதியை வழங்கினார். டிஜிபியின் இந்த திடீர் ஆய்வு போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சேலம் மாவட்ட காவல்துறையில் கருமலைக்கூடல், மேச்சேரி ஸ்டேஷன்களில் டிஜிபி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: