விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு

சேலம், ஜூன் 25: சேலம் அருகே விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கெயில் நிறுவனம் சார்பில் கேரளாவில் இருந்து பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் குழாய் அமைக்க, அங்குள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களில் வழியாக இந்த குழாய் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், நெடுஞ்சாலைகளின் ஓரத்திலும், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் மற்றும் ஓடைகள் வழியாகவும் குழாய் அமைத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,’’ என்றனர். இதேபோல், இடைப்பாடி அருகே வேம்பனேரி தாதாபுரம் பகுதியை சேர்ந்த சென்னி என்பவர் அளித்த மனுவில், எங்களது பூர்வீக பட்டா நிலத்தில் வளர்த்து வந்த விவசாய பயிரை, வேண்டுமென்றே சிலர் சேதப்படுத்தினர். மேலும் அதனை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

The post விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: