நாட்டின் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் என்னால் மக்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை!: நிதின் கட்கரி வருத்தம்

புதுடெல்லி: நாட்டின் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் என்னால் மக்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்தார். ஒன்றிய அரசின் சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தும், என்னால் விபத்துகளால் உயிரிழப்பதை தடுக்க முடியவில்லை. இதனை சொல்வதால், எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாலை விபத்துகளை குறைக்க முடியாது. அமைச்சராக என்னால் முடிந்த எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறேன். ஆனால் நாட்டில் நடக்கும் விபத்துகளை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். கடந்த 2014ம் ஆண்டு முதல் நாட்டின் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்கள் நடக்கின்றன. 1.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 3 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். அவர்கள் கை, கால்கள் சேதமடைகின்றன. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தி வந்தாலும் கூட, விபத்தால் ஏற்படும் கரும்புள்ளிகளை நினைத்து வருந்துகிறேன். சாலை விதிகள் குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்களின் மனம் மாறாத வரை, சாலை விபத்துகளை குறைக்க முடியாது. விபத்தில் சிக்குபவர்களில் 60 சதவீதமானவர்கள் 20 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். எனவே அரசுடன் சேர்ந்து ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அனைத்து மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க முடியும்’ என்றார்.

The post நாட்டின் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் என்னால் மக்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை!: நிதின் கட்கரி வருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: