ஹைவேவிஸ் பேரூராட்சி பகுதியில் பள்ளி வகுப்பறை, சத்துணவு சமையலறை கட்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு

கம்பம், ஜூன் 11: தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் ஹைவேவிஸ், மேல் மணலாறு, இரவங்கல்லாறு ஆகிய மலைப்பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உள்ளது. இங்கு 2 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 சத்துணவு சமையலறைகள் கட்ட பூமி பூஜை போட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கோதாண்டபாணி தலைமையில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழன், ரேணுகா காட்டுராஜா ஆகியோர் நேற்று ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் அருகே சத்துணவு சமையலறை கட்ட பூமி பூஜை செய்தனர்.

பின்னர் ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமான பணிகளுக்காக வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் வனத்துறை அனுமதியின்றி புதிய கட்டட பணிகள் செய்யக்கூடாது எனக் கூறி தடுத்தனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் சின்னமனூரிலிருந்து வந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் தளவாட பொருட்களை திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

The post ஹைவேவிஸ் பேரூராட்சி பகுதியில் பள்ளி வகுப்பறை, சத்துணவு சமையலறை கட்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: