வங்கியில் இருந்து மீட்டு வந்தார் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் அபேஸ்

 

சேத்தியாத்தோப்பு, ஜூன் 11: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சம்பவராயபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜலிங்கம் மனைவி செல்வம்(60).
இவர் குடும்ப செலவிற்க்காக தனது 3 பவுன் தாலி சங்கிலியை காட்டுமன்னார்கோவிலில் உள்ள வங்கியில் அடகு வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக கடந்த 7ம் தேதி காலை மூதாட்டி செல்வம் வங்கிக்கு வந்துள்ளார். பின்னர் தாலி சங்கிலியை மீட்டு தனது கைப்பையில் வைத்து விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வங்கி வாசலில் சில பெண்கள் நின்று கொண்டு நூறுநாள் வேலைக்கு பணம் வாங்க வந்திருப்பதாகவும், அது பற்றியும் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு நின்று செல்வம் வேடிக்கை பார்த்துள்ளார். அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் அவர் அருகே நின்றுள்ளனர். அதை பற்றி செல்வம் கண்டுகொள்ளவில்லை. சற்று நேரத்தில், அங்கிருந்து சென்ற செல்வம் திடீரென சந்தேகத்தின் பேரில், பையை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது தனது பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறி அழுது கொண்டு வங்கிக்கு சென்று வங்கி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத வங்கி ஊழியர்கள் அவரை வங்கியை விட்டு வெளியேற்றிதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன மூதாட்டி இதுகுறித்து, காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட வங்கியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள தாலி சங்கிலியை பறிகொடுத்துவிட்டு மூதாட்டி செல்வம் கதறி அழுதது அங்கு உள்ளவர்களை கண்கலங்க செய்தது.

The post வங்கியில் இருந்து மீட்டு வந்தார் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: