பல்லடம் அறிவொளி நகரில் நரிக்குறவர் இனமக்கள் பழங்குடியின சான்று பெற 16ம் தேதி சிறப்பு முகாம்

 

திருப்பூர், ஜூன் 11: பல்லடம் அருகே அறிவொளிநகரில் நரிக்குறவர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வருகிற 16ம் தேதி சிறப்பு முகாம் நடத்த, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் நாராணாபுரம் கிராமம் அறிவொளிநகர் பகுதியில் ஏராளமான நறிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, நரிக்குறவ இன மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதும், பழங்குடியினர் சான்று பெறுவதற்கான தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் இன்றி இருப்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவாக சான்றிதழ் கிடைக்கும் வகையில் சப்-கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.  அதன்படி வருகிற 16ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாராணாபுரம் அறிவொளிநகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு முகாம் நடத்த சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் சாதிச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, பட்டா மற்றும் குடிநீர் வசதி, சாலை வசதி, பொது சுகாதாரம், தெருவிளக்கு, மின் இணைப்பு பணிகள், மகளிர் மேம்பாடு மற்றும் சுய உதவிக்குழு அமைத்தல் தொடர்பான பணிகள், தொழில் தொடங்க கடன் வசதி, மருத்துவ பரிசோதனை, பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுத்து பள்ளியில் சேர்த்தல் தொடர்பான பணிகள் என அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதுபோல் இந்த பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக முகாமை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பல்லடம் அறிவொளி நகரில் நரிக்குறவர் இனமக்கள் பழங்குடியின சான்று பெற 16ம் தேதி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: