இகா ஸ்வியாடெக் மீண்டும் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முகோவாவுடன் (26 வயது, 43வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் (22 வயது, போலந்து), அதிரடியாக விளையாடி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த முகோவா 7-5 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க, 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால், வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது.

எனினும், நம்பர் 1 வீராங்கனை மற்றும் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துக்கு ஏற்ப தனது அனுபவத்தை பயன்படுத்தி முகோவாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஸ்வியாடெக் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தொடர்ந்து 2வது முறையாகவும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3வது முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்தார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது. ஸ்வியாடெக் வென்ற 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. அவர் பிரெஞ்ச் ஓபனில் 3 (2020, 2022, 2023), யுஎஸ் ஓபனில் (2022) ஒரு முறை பட்டம் வென்றுள்ளார். முகோவா தோல்வியை தழுவினாலும், கடைசி வரை போராடி நம்பர் 1 வீராங்கனையை திணறடித்ததால் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.

The post இகா ஸ்வியாடெக் மீண்டும் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: