பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் – நார்வே வீரர் கேஸ்பர் ரூட் இன்று மோதுகின்றனர்.
முன்னாள் நம்பர் 1 வீரரும், 2 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (36 வயது, 3வது ரேங்க்) 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை முறியடிக்கும் முனைப்புடன் இன்றைய பைனலில் களமிறங்குகிறார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச், நடால் தலா 22 பட்டங்களுடன் முதல் இடத்தில் இருக்கின்றனர். பிரெஞ்ச் ஓபன் உள்பட களிமண் தரை மைதானங்களில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளின் முடிசூடா மன்னன், நடப்பு சாம்பியன் நடால் காயம் காரணமாக நடப்புத் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் நடால் சாதனையை முறியடிப்பதுடன், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பும் ஜோகோவிச்சுக்கு பிரகாசமாக உள்ளது. தற்போதைய நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸ் உள்பட இளம் வீரர்களின் சவாலை முறியடித்து பைனலுக்கு முன்னேறி உள்ள ஜோகோவிச், அதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் (24 வயது, 4வது ரேங்க்) உடன் மோதுகிறார். கேஸ்பர் தொடர்ந்து 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த யுஎஸ் ஓபனிலும் இவர் பைனல் வரை முன்னேறி இருந்தார்.
இந்த முறை எப்படியாவது கிராண்ட் ஸ்லாம் சாம்பியனாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் கேஸ்பர் உறுதியுடன் உள்ளார். இரு வீரர்களுமே கோப்பையை கைப்பற்ற வரிந்துகட்டுவதால், இந்த இறுதிப் போட்டி டென்னிஸ் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நேருக்கு நேர்: ஜோகோவிச் – கேஸ்பர் இதுவரை 4 முறை மோதியுள்ளதில் (2 அரையிறுதி, 1 பைனல்), ஜோகோவிச் 4 போட்டியிலும் நேர் செட்களில் வென்று அசத்தியுள்ளார். இந்த 4 போட்டியும் இத்தாலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2022 ஏடிபி பைனல்சில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் கேஸ்பரை வீழ்த்தினார்.
The post பிரெஞ்ச் ஓபன் பைனலில் ஜோகோவிச் – கேஸ்பர் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.