அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு அண்ணாமலை மிரட்டல் எதிரொலி அமித்ஷா சந்திப்பை ரத்து செய்த எடப்பாடி: கூட்டணியை இறுதி செய்யும் திட்டம் தோல்வி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடுவதாக தொடர்ந்து அண்ணாமலை மிரட்டி வருவதால், சென்னையில் அமித்ஷாவை நேற்று இரவு சந்திக்கும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி உடல்நலக்குறைவு காரணத்தைக் காட்டி ரத்து செய்து விட்டார். இதனால் பன்னீர்செல்வத்தையும் சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார். இதன் காரணமாக, கூட்டணியை இறுதி செய்ய திட்டமிட்டிருந்த பாஜவின் முடிவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் தொடங்க இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்யவும், பாஜவுக்கு எதிரான பலம்பொருந்திய கூட்டணியை ஏற்படுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்காக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் வருகிற 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி கூட்டணியை இறுதி செய்கின்றன.

குறிப்பாக 450 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜ அரசுக்கு எதிராக பல்வேறு முடிவுகளையும் எடுக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால், பாஜவும் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. பல்வேறு கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விட்டதால், பல ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை சேர்க்கும் பணியை அமித்ஷா தொடங்கியுள்ளார். ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா முடிவு செய்துள்ளார். அதிமுகவில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி ஆகியோரை ஒன்றிணைக்கும் பணிகளை செய்யுமாறு அமித்ஷா எடப்பாடியை கேட்டுக் கொண்டார்.

ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். கட்சி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வந்து விட்டதால், அவர்களை சேர்த்து மீண்டும் குழப்பம் உருவாக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். பாஜவுக்கும் அதிமுகவை விட்டால் வேறு வழி இல்லாததால், அக்கட்சியுடன் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காகத்தான் எடப்பாடியை டெல்லி வரும்படி அமித்ஷா அழைத்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் குறித்தும், எடப்பாடி குறித்தும் அண்ணாமலை ஏற்கனவே தாக்கி பேசியிருந்தார். இது குறித்த புகார்களை அமித்ஷாவிடம் கூறிய எடப்பாடி, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைத்த அமித்ஷா இருவரையும் சந்திக்க வைத்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தநிலையில் அமித்ஷா அதிமுக கூட்டணியை இறுதிப்படுத்த முடிவு செய்தார். இதற்காக அமித்ஷா நேற்று இரவு 9.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தார். அவரை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சுதாகர்ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அமித்ஷா நேராக ஓட்டலுக்குச் சென்றார். ஓட்டலில் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அப்போது கூட்டணியை இறுதிப்படுத்தவும் திட்டமிட்டிருந்தார். பின்னர் பன்னீர்செல்வத்தையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதேநேரத்தில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சமீப நாட்களாக, அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி வருகிறார்.

இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. தனது அதிருப்தியை வெளிப்படுத்தவே, அமித்ஷா சென்னை வரும்போது தனக்கு கால் வலிப்பதாக கூறி சென்னைக்கு வருவதை தள்ளிப்போட்டு விட்டார். அமித்ஷாவுடனாக சந்திப்பை ரத்து செய்து விட்டார். இது அமித்ஷாவுக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. டெல்லியில் வந்து சந்திக்க பல ஆண்டுகள் காத்திருந்த எடப்பாடி சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது பாஜக தலைவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா சந்திக்க முடியாததால், பன்னீர்செல்வத்தையும் சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார்.

எடப்பாடியை பார்க்காமல், பன்னீர்செல்வத்தைப் பார்த்தால் அது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அமித்ஷா கருதுகிறார். இதனால் அதிமுக தலைவர்கள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பிரேமலதா, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர்களையும் சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார். அவர்களது சந்திப்பும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக கூட்டணியை இறுதி செய்யும் முடிவோடு சென்னை வந்த அமித்ஷாவின் பயணம், தோல்வியில் முடிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் முடிவால், எந்தக் கூட்டணிக் கட்சியின் தலைவர்களையும் அமித்ஷா சந்திக்க வில்லை.

இதனால் சென்னையில் நேற்று இரவு விஐபிக்களை மட்டுமே சந்தித்தார். இன்று காலையில் கோவிலம்பாக்கத்தில் நடைபெறும் பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் விமானம் மூலம் வேலூர் செல்கிறார். அங்கு கூட்டம் முடிந்ததும் சென்னை விமானநிலையம் திரும்புகிறார். மாலையில் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். விமானநிலையத்திலாவது சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். இதனால் நேற்று இரவு வரை அவரது சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.

* வரவேற்காத அண்ணாமலை
அமித்ஷா நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தார். அவரை வரவேற்க மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் வரவில்லை. அவர் அமித்ஷா தங்கும் ஓட்டலில் இருந்தார். வழக்கமாக தலைவர்கள் வரும்போது அண்ணாமலை வரவேற்பது வழக்கம். ஆனால் அண்ணாமலையை விமானநிலையத்துக்கு வரவேண்டாம் என்று அமித்ஷா கூறிவிட்டதாகவும், ஓட்டலில் இருந்தால் போதும் என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால், தமிழகத்தில் அண்ணாமலை மீது பல தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அங்கு வந்த இடத்தில் அமித்ஷா முன்னிலையில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே அமித்ஷா, அண்ணாமலையை வரக்கூடாது என்று உத்தரவிட்டதாகவும், அதனால்தான் அவர் விமானநிலையம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

* அமித்ஷா-விஷால், சிவகார்த்திகேயன் சந்திப்பும் கேன்சல்
தேர்தல் நெருங்குவதால், நடிகர்கள், விஐபிக்களை சந்தித்து அவர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஒவ்வொரு தேர்தலிலும் பாஜ செய்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கு மற்றும் இந்தி நடிகர்கள் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினர். சென்னையில் நேற்று இரவு அமித்ஷாவை நடிகர் விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்து வந்தனர்.

ஆனால் அவர்கள் இருவரும் கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டனர். அதைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற அனிதா பால்துரை, அப்பல்லோ நிர்வாகிகள் ப்ரீத்தா ரெட்டி, விஜயகுமார் ரெட்டி, தொழில் அதிபர்கள் ஏ.சி.சண்முகம், நல்லிகுப்புசாமி ரெட்டி, பாரிவேந்தர் பச்சைமுத்து, ரவி பச்சைமுத்து, ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, நவாப் சதா முகது ஆசீப் அலி, எம்ஏஎம்ஆர் முத்தையா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தேவநாதன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, சினிமா தயாரிப்பாளர் ஏ.ஆர்.ராஜசேகரன், வேல்ஸ் கல்லூரிகள் தலைவர் ஐசரிகணேஷ், பிரமோத்ராஜன், அபிராமிராமநாதன், ஜி.எஸ்.கே.வேலு ஆகிய 22 பேர் சந்தித்து பேசினர்.

* விமானநிலையம் முன் மறியல்
சென்னையில் நேற்று மாலை பல இடங்களில் மழை பெய்தது. விமானநிலைய பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இதனால் விமானங்கள் தாமதமாக வந்தன. அமித்ஷாவும் 45 நிமிடம் தாமதமாகத்தான் சென்னை வர முடிந்தது. பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. அமித்ஷா விமானநிலையத்தில் இருந்து வெளியே ‘ரோட் ஷோ’வாக வந்து கொண்டிருந்தபோது மின்சாரம் கட் ஆனது.

இதை தொடர்ந்து அவர் சென்ற பிறகு, மின்சார தடைக்காக பாஜகவினர் திடீரென விமானநிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை என்பதால் வெளியூர் செல்லக்கூடியவர்களும், விமானநிலையத்துக்கு வந்தவர்களும், வேலை முடிந்து சென்ற பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

The post அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு அண்ணாமலை மிரட்டல் எதிரொலி அமித்ஷா சந்திப்பை ரத்து செய்த எடப்பாடி: கூட்டணியை இறுதி செய்யும் திட்டம் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: