அக்மார்க் தர ஆய்வில் தர்மபுரி ஆய்வகம் முன்னிலை கடந்த ஆண்டில் 2,519 மாதிரி பகுப்பாய்வு செய்து சான்று

தர்மபுரி, ஜூன் 10: தமிழகத்தில் உள்ள 31 ஆய்வகங்களில், தர்மபுரி அக்மார்க் ஆய்வகம் முன்னிலை வகிக்கிறது. இங்கு கடந்தாண்டு 2,519 மாதிரி பகுப்பாய்வு செய்து, அக்மார்க் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. அக்மார்க் என்பது இந்தியாவில் விவசாயப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தரச் சான்றிதழ் அடையாளம் ஆகும். இந்த சான்றிதழ் கொண்ட பொருட்கள் சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு இயக்குனரகம் ஒப்புதல் அளித்த தர நிலைகளின் தொகுப்பிற்கு இணங்குவதாக உறுதியளிக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையின் இணைக்கப்பட்ட இந்த அலுவலகம் இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் ஆகும்.

இது இந்தியாவில், கடந்த 1937ம் ஆண்டின் விவசாய உற்பத்தி (தரப்படுத்தல் மற்றும் குறித்தல்) சட்டத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய அக்மார்க் தரநிலைகள், பல்வேறு பருப்பு வகைகள், தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், காய்கறி எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் சேமியா போன்ற பகுதி பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் உள்ளிட்ட 231 வகையான வேளாண் பொருட்களுக்கு, அக்மார்க் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து தரச்சான்று வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான அக்மார்க் ஆய்வகங்கள் மூலம், அக்மார்க் சான்றிதழ் வழங்கப் படுகிறது.

தமிழகத்தில் 31 அக்மார்க் ஆய்வகங்கள் உள்ளன. இதில் தர்மபுரி அக்மார்க் ஆய்வகம் முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி அக்மார்க் ஆய்வு கூடங்களில் நெய், சூரியகாந்தி எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம்மசாலா, கடலை மாவு உள்ளிட்ட பல உணவு பொருட்கள் சோதனை செய்து, அக்மார்க் தரச்சான்று வழங்கப்படுகிறது. அக்மார்க் சோதனை செய்து தரச்சான்றுடன் சந்தையில் விற்பதால், கலப்பட பொருட்கள் விற்பனை தடுக்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு, தர்மபுரி மாநில அக்மார்க் ஆய்வு கூடத்தில், 2,519 ஆய்வுகள் சோதனை செய்து தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ₹43.63 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மாநில அரசுக்கு ₹21.25 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தர்மபுரி அக்மார்க் ஆய்வுக்கூடத்தின் வேளாண் அலுவலர் (வேதியியல்) முருகன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 31 ஆய்வகங்களில், தர்மபுரி அக்மார்க் ஆய்வகம் முன்னிலை வகிக்கிறது. தர்மபுரியில் 1981ம் ஆண்டு மாநில அக்மார்க் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அரசின் இலக்கு நிர்ணயத்தை, தர்மபுரி ஆய்வுக்கூடம் அடைகிறது. கடந்தாண்டு 2,519 மாதிரி பகுப்பாய்வு செய்து, அக்மார்க் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான வாழ்விற்கு அக்மார்க் உணவு பொருட்கள்தான் சிறந்தது. தரமானது, சுத்தமானது, கலப்படமற்றது அக்மார்க் பொருட்கள். பொதுமக்கள் சந்தையில் அக்மார்க் முத்திரையிட்ட பொருட்களை கேட்டு, வாங்கி பயன்படுத்த வேண்டும். அக்மார்க் தர முத்திரை பெறவேண்டும் என்றால், உணவு பாதுகாப்பு சட்ட உரிமச் சான்று, ஜிஎஸ்டி பதிவு சான்று, குத்தகை ஒப்பந்தம் சான்று, கூட்டுப்பத்திரம், இயந்திரங்கள் விபரம், நிறுவன வரைப்படம், டிபிஎல் நகல் மற்றும் சில ஆவணங்கள் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post அக்மார்க் தர ஆய்வில் தர்மபுரி ஆய்வகம் முன்னிலை கடந்த ஆண்டில் 2,519 மாதிரி பகுப்பாய்வு செய்து சான்று appeared first on Dinakaran.

Related Stories: