ஆலூத்துப்பாளையத்தில் ரேஷன் கடை திறப்பு

 

பல்லடம், ஜூன் 10:பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூர் ஊராட்சி ஆலூத்துப்பாளையம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். புதிய கட்டிடத்தை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் குமார், பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமேகலை அன்பரசன், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாட்சியர் (பொறுப்பு) சரவணக்குமார், செயலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ செல்வராஜூயிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தாங்கள் 30 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம்.

எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். எங்களது கிராமத்திற்கு வழித்தடம் எண் 14 டவுன் பஸ் பல்லடத்தில் இருந்து கேத்தனூருக்கு பள்ளி நேரத்திற்கு மட்டும் வந்து செல்கிறது. மற்ற சமயத்தில் பல்லடம் செல்ல வேண்டும் என்றால் ரூ.150 முதல் ரூ.200 வரை ஆட்டோவிற்கு செலவு செய்ய வேண்டியது உள்ளது. எனவே எங்களது கிராமத்திற்கு கூடுதலாக பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

The post ஆலூத்துப்பாளையத்தில் ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: