2 ஆண்டுகளாக மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்காததால் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை

திருவெறும்பூர், ஜூன் 9: இரண்டு ஆண்டுகள் மத்திய அரசு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்காததால். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை துவங்கி வைத்த விழாவில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்,

பின்னர் அவர் அளித்த பேட்டி:
தற்போது நவீன காலமாக உள்ளது. உலகை விஞ்ஞானம் புரட்டிப்போட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு ஏற்ப கல்வியை கற்று குடும்பத்தை காக்கவும் நாட்டிற்கு சேவை செய்ய இதுபோன்ற பயிற்சி மையங்கள் முக்கியம். திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை பல ஆண்டு பிரச்சனையாக உள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு இயற்கை வேளாண் பொருள்களுக்கு ஆதார விலையை உயர்த்தியது வழக்கமான ஒன்றுதான் விவசாயிகள் பயனடைவார்கள். பெல் நிறுவனம் பாய்லர் ஆலையை மட்டும் தயாரிப்பது அல்லாமல் மற்ற பொருள்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் சிறு தொழிற்சாலைகள் நலிவடைந்து விடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன்பின் ஒதுக்கப்பட்டதை பிரித்து வழங்கி வருகிறேன்.

திருச்சி மாநகருக்கு மட்டும் குடிநீருக்கு ஒரு கோடி ரூபாயும், மின்விளக்குகளுக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்றார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post 2 ஆண்டுகளாக மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்காததால் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை appeared first on Dinakaran.

Related Stories: