செம்பனார்கோயில் பகுதியில் கத்திரி முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில் இளநீர், தர்பூசணி சாப்பிட்டு சூட்டை தணிக்கும் பொதுமக்கள்

செம்பனார்கோயில், ஜூன்9: செம்பனார்கோயில் பகுதியில் கத்திரி முடிந்தும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி சாப்பிட்டு சூட்டை தணிக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், பரசலூர், மேலப்பாதி, மேலையூர், ஆக்கூர், மடப்புரம், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையார், சங்கரன்பந்தல், தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதம் கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து மேலும் வெயில் வாட்டி வதைப்பதால் உஷ்ணம் தாங்க முடியாமல் டூவீலர்கள், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். வெயிலின் தாக்கத்தால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படும் தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கத்திரி வெயில் முடிந்தும் வெயில் வாட்டி வதைப்பதால் மதிய நேரங்களில் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது. மிகவும் அவசியமான பணிகளுக்கு செல்வோர் மட்டுமே வேறு வழியின்றி சுட்டெரிக்கும் வெயிலில் செல்லும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு செல்வோர் வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீர், தர்பூசணி, பனநுங்கு, வெள்ளரிக்காய், சாத்துக்குடி, கிர்ணி பழம் போன்ற நீர் சத்து நிறைந்த உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு சாலையோரங்களில் தர்பூசணி, கரும்பு ஜூஸ், பனநுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் போன்ற பொருட்களின் விற்பனை படுஜோராக காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் குறைப்பதுடன் வியாபாரிகளும் பயனடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களிலும் உஷ்ணத்தால் வியர்த்துக்கொட்டி தூங்க முடியாமல் குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

The post செம்பனார்கோயில் பகுதியில் கத்திரி முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில் இளநீர், தர்பூசணி சாப்பிட்டு சூட்டை தணிக்கும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: