பண்ணை இயந்திர பணிக்கு ஊக்குவிப்பு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, ஜூன் 9: பண்ணை இயந்திர பணிக்கு ஊக்குவிப்பு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொந்த நிலமுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு, வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி இ வாடகை செயலியில் பதிவு செய்து நிலமேம்பாடு, உழவு, விதை விதைத்தல், களையெடுத்தல், அறுவடை, பண்ணைக் கழிவு மேலாண்மை முதலான வேளாண் பணிகளை மேற்கொள்ள 2022-23ம் ஆண்டிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள், தங்கள் அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகத்தை அணுகி, உரிய விண்ணப்பத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து நிலத்தின் சிட்டா, புல வரைபடம், சிறு, குறு விவசாயிகளின் சான்றிதழ், இ&வாடகை செயலியில் பதிவு செய்த விவரம், ஆதார் அட்டையின் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். வேளாண் பணிகள் முடிவுற்ற பின், துறை அலுவலர்களால் பணி முடிவுற்ற நிலப் பரப்பு அளவீடு செய்யப்பட்டு, பின்னர் அதற்கேற்ப செலுத்திய மொத்த வாடகைத் தொகையில் 50 சதவிகித தொகையானது, பின்னேற்பு மானியமாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒரு விவசாயிக்கு 5 மணி நேரம் அல்லது 5 ஏக்கர், இவற்றில் எது குறைவோ அவற்றிற்கான வாடகைத் தொகை கணக்கில் கொள்ளப்படும்.

ஒரு விவசாயி புன்செய் நிலம் வைத்திருப்பின் ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு மணிக்கு ₹250 விகிதத்தில், அதிகபட்சமாக ₹1250 வரை ஒரு முறை மட்டுமே மானியமாகப் பெறலாம். இத்திட்டத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 1620 ஏக்கர் பரப்பில் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்கள் மூலம் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியமாக ₹4 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, இ வாடகையில் பதிவு செய்து பணி மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இ வாடகையில் பதிவு மேற்கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பத்தினை அளித்து மானியம் பெற்று பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post பண்ணை இயந்திர பணிக்கு ஊக்குவிப்பு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: