திருத்தணி நகராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து அதிகாரி ஆய்வு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் திருப்பாற்கடல் பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து செங்கல்பட்டு நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக திருத்தணி திருப்பாற்கடல் பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.104 கோடியில் கொண்டுவரப்பட்டு அதற்கான குழாய் பைப்புகள் பதிக்கும் பணி திருப்பாற் கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் திருத்தணி சேகர் வர்மா நகர் மற்றும் கன்னிகாபுரம் சாலையில் நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன.

மேலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக குடிநீர் இணைப்பு பைப்புகளும் பொருத்தப்பட்டு வருகிறது. இதேபோல் திருத்தணி அரக்கோணம் சாலையில் ரூ.12 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம், கடைகள், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து நிறுத்துமிடங்கள், ஓட்டல் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை செங்கல்பட்டு நகராட்சி மண்டல இயக்குனர் சசிகலா திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் திருத்தணி நகராட்சியில் உள்ள 20 ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 1,020 மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் தயாரிக்கும் உணவுக் கூடத்தையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) நடராஜன், பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜன், ஒப்பந்ததாரர் தாமோதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருத்தணி நகராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: