ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்..!

டெல்லி: வெளிநாடு செல்லும் போதெல்லாம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்து பேசுகிறார் என அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது; இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன, இந்தியாவில் குரல்வளைகள் முடக்கப்படுகின்றன என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்; நம்பிக்கையும் திறமையும் கொண்ட நாடாக உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என உலகம் குறிப்பாக தெற்குலகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சிக்கான பங்குதாரராக இந்தியாவைப் பார்க்கின்றன. அதோடு, பொருளாதார ஒத்துழைப்பாளராகவும் உலக நாடுகள் இந்தியாவைப் பார்க்கின்றன. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து ராகுல் காந்தி வெளிநாடுகளில் சென்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை விமர்சிப்பது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்; ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் நாட்டை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தியாவில் அவர் என்ன செய்கிறார் என்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் அதை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதால் இந்தியாவுக்கு பலனில்லை.

இந்தியாவில் காங்கிரஸ் தலைவர்களுக்கு என்று பார்வையாளர்கள் யாரும் இல்லை. அதனால் அவர்கள் வெளிநாடு போகிறார்கள். அவர்கள் 100 முதல் 200 பேரை அழைத்து அறை ஒன்றில் கூட செய்து சொற்பொழிவாற்றுகிறார்கள். வெளிநாட்டுக்குச் சென்று, தங்களது சொந்த நாட்டை விமர்சிக்கும் இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள்? என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இதுபோன்ற விஷயங்களை வேறு எந்த அரசியல் தலைவர்களும் செய்ய மாட்டார்கள் எனவும் காட்டமாக விமர்சித்தார்.

The post ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்..! appeared first on Dinakaran.

Related Stories: