22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்து மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் ஐந்து மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் வழி பாடப்புத்தகங்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதில் தொழிற்பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரிசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஐடிஐ முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிட முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டின் இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில், தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2877 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

இந்த மையங்களில், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட்., நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங், மெக்கானிக் மின்சார வாகனங்கள், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுஃபேக்சரிங், இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு பிளம்பிங், அட்வான்ஸ்டு ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5 : 12.5 என்ற விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்தும்.

அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 30.06.2023-க்கு முன்னதாக தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 14.6.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் – ஒரகடம், செங்கல்பட்டு மாவட்டம் – செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் – ராணிப்பேட்டை, அரக்கோணம், விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனம், கடலூர் மாவட்டம் – கடலூர், சிதம்பரம், ஈரோடு மாவட்டம் – ஈரோடு, திருப்பூர் மாவட்டம் – தாராபுரம், நாமக்கல் மாவட்டம் -நாமக்கல், சேலம் மாவட்டம் – சேலம், மதுரை மாவட்டம் – மதுரை, தேனி மாவட்டம் – தேனி, போடி, திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் – தூத்துக்குடி, திருச்சி மாவட்டம் – திருச்சி, மணிகண்டம், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இதன்மூலம், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வழக்கொழிந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10,040 மாணவர்கள் இந்த 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவர். இதுதவிர, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்று பயனடையலாம்.

மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள் இதுவரை ஆங்கில மொழியில் இருந்து வந்தது. 2022-2023-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க, திறன் பயிற்சிகளை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ரூ.6.80 கோடி செலவில் தமிழில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, தமிழில் பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள், திரு.கு.செல்வப்பெருந்தகை, திரு.ஜோசப் சாமுவேல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., டாடா குழும தலைவர் திரு. என். சந்திரசேகரன், தலைமை செயல் அலுவலர் திரு. வாரன் ஹாரிஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், காணொலி காட்சி வாயிலாக மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

The post 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: