புதுக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை: 500 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி அருகே சுற்றுவட்டாரங்களில் உள்ள வாணக்கன்காடு, கோட்டைக்காடு, ராசியமக்களம், வாண்டான் விடுதி, கருக்கா குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றால் கனமழை பெய்தது. இதனால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.

ஏக்கருக்கு 1.80 லட்சம் செலவு செய்து விளைவிக்கப்பட்ட வாழை மரங்கள் சேதமானதால் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை மரங்கள் மட்டுமின்றி நெற்பயிர்கள், சவுக்கு மரம், பலா மரம், பூச்செடிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பதால் படித்து வேலையின்றி உள்ள முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்கள் விவசாயத்தில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தற்போது மழை மற்றும் காற்றால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் செய்வதறியாது அவர்கள் திகைத்து வருகின்றனர்.

The post புதுக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை: 500 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: