காவல்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் 283 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி, ஜூன் 8: திருச்சியில் காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு சங்கர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 283 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்பேரில், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) சங்கர் தலைமையில் திருச்சி மாநகர மற்றும் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெற்றதா என்று கண்டறியும் வகையில் மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நேற்று திருச்சி கே.கே.நகரில் திருமண மண்டபத்தில் நடந்தது. மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், திருச்சி எஸ்பி சுஜித்குமார், புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் திருச்சி மாநகரத்திலிருந்து 180 மனுக்கள், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களை அடக்கிய திருச்சி சரகத்திலிருந்து 203 மனுக்கள் என மொத்தம் 383 மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம்-ஒழுங்கு சங்கர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தும், விசாரணை செய்தும் பெரும்பாலான மனுக்களில் 283 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து, காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் சட்டம் -ஒழுங்கு பேசுகையில், முதல்வர் காவல் நிலையங்களில் மக்கள் தங்களது புகார்களை எந்த சிரமமுமின்றி பதிவு செய்ய வேண்டும் எனவும், அம்மனுக்கள் மீது குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியருக்கு போதை பொருட்களின் தீமைகள் குறித்தும், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்தும் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று மதியம் நடந்தது. இதில் கலை குழுவினர்களால் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 1,600 ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். போதை பொருட்களின் தீமைகள் குறித்தும் அதிலிருந்து விடுபட்டு வருவதன் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம்-ஒழுங்கு பேசுகையில், மாணவ, மாணவிகள் அனைவரும் காவலர்கள் ஆகிவிட்டீர்கள். காவலர்களை போன்று கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிக்க பாடுபட வேண்டும் என்றார். தொடர்ந்து திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களுடன் முக்கிய வழக்குகளின் ஆய்வு கூட்டம் காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம்-ஒழுங்கு சங்கர் தலைமையில் மாநகர காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

The post காவல்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் 283 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: