தாந்தோணிமலை நகர் நல மையம்: முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்

கரூர், ஜூன்7: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை நகர் நல மையத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் நகர் நல மையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கலந்து கொண்டார்.

இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதல்வர் சட்டமன்ற பேரவையில் 110 விதிகளின்படி கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இருப்பதை போல, நகர்ப்புற நல மையங்கள் அமைய உள்ளதாக அறிவித்திருந்தார். அதனடிப்படையில், தமிழ்நாடு முழுதும் 500 நகர் நல மையத்தினை திறந்து வைத்துள்ளார். இதில், கரூர் மாவட்டத்திற்கு நான்கு நகர் நல மையங்கள் அமையப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் தாந்தோணி நகர் நல மையம், பசுபதிபாளையம் நகர் நல மையம், ஆசாத் ரோடு நகர் நல மையம், இனாம் கரூர் நகர் நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதன் நோக்கம், நகர்ப்புறங்களில் மக்கள் அரசு மருத்துவமனைகள் நோக்கி வரும் போது கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையை மாற்றி ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்குவதே ஆகும். இந்த மையங்களில் மருத்துவ சேவைகள் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும்,இ மாலை 4மணி முதல் 8 மணி வரை வழங்கப்படும்.இந்த மையங்களில் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 பல்நோக்கு சுகாதார ஆய்வாளர், 1 உதவியாளர், பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நல மையங்களில் தரமான சேவைகளை வழங்குவதற்கு என ஒவ்வொரு மையத்திற்கும் 20 மருத்துவ உபகரணங்களும், 13 தளவாட சமான்களும், 12 அத்தியாவசிய மருத்துவ பொருட்களும் மற்றும் தேவையான மருத்துவம் சம்பந்தப்பட்ட விளம்பர பதாதைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,இ தேவையான அளவு மருந்துகள், ஊசிகள், இதர பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் தாமோதரன், மாநகராட்சி துணை மேயர் சரவணன், கமிஷனர் ரவிச்சந்திரன், இணை இயககுநர் (நலப்பணிகள்) ரமாமணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், பொறியாளர் நக்கீரன், கோட்டாட்சியர் ரூபினா, தாசில்தார் வெங்கடேஷ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post தாந்தோணிமலை நகர் நல மையம்: முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: