அருப்புக்கோட்டை, ஜூன் 8: அருப்புக்கோட்டையில் கனமழையால் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட 83 குடும்பங்களுக்கு ரூ.3.41 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4ம் தேதி சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வீடுகள் சேதமடைந்து, மரங்கள், மின்கம்பங்களும், மின் மாற்றிகளும் சாய்ந்து விழுந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
மேலும், வருவாய்த் துறை, மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து விழுந்து கிடக்கும் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. அதனைத் தொடர்ந்து, கன மழையினால் சேதமடைந்த வீடுகள் வருவாய்த்துறை மூலம் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட வீடுகளின் சேதத்தின் அடிப்படையில் 82 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100, ஒரு குடும்பத்திற்கு ரூ.5,200 என வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 83 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 400 நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நெசவாளர் காலனியில் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு நிதிஉதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்(பொ) அனிதா, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, நகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், தாசில்தார் அறிவழகன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணை தலைவர் பழனிச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் ஜோதி ராமலிங்கம், இளங்கோ, நாகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அருப்புக்கோட்டை நகரில் சூறாவளி, மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி appeared first on Dinakaran.