தனியார் பள்ளி முதல்வருக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்: ராயபுரத்தில் போலீஸ் குவிப்பு

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் தனியார் பள்ளி முதல்வரை கண்டித்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் சூரிய நாராயண தெருவில் கலைமகள் வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக பள்ளியில் முதல்வராக வந்துள்ள சாரதா என்பவர் ஆசிரியர்கள், மாணவர்களை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசுவதாகவும், மாணவர்களின் பெற்றோர் வந்தால் அவர்களிடமும் தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், குழந்தைகள் தினத்தன்று கூட ஒரு சில மாணவர்கள் பள்ளி சீருடை இல்லாமல் வந்ததாகவும், அவர்களை தரக்குறைவாக முதல்வர் சாரதா பேசியதாகவும் கூறப்படுகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் வீடு திரும்பும் மாலை வேளையில் ஆசிரியர்கள் திடீரென நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் கழிவறை டியூப் லைட் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்துள்ளனர். இதனால் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தனியார் பள்ளி முதல்வருக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்: ராயபுரத்தில் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: