சென்னை: தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 6,85,513 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால், கடந்த 16ம் தேதி (சனி), 17ம் தேதி (ஞாயிறு) 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த 2 நாள் சிறப்பு முகாமில் 6,85,513 பேர் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலை சேர்க்க 4,42,035 பேரும், பெயரை நீக்க 44,128 பேரும், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்ற அல்லது தற்போது வசிக்கும் தொகுதிகுள்ளேயே மாற்றி திருத்தம் செய்ய 1,98,931 பேரும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்க 419 பேரும் என மொத்தம் 6,85,513 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றார்.
The post தமிழ்நாட்டில் 2 நாள் நடந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 6,85,513 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.