பழநி, ஜூன் 8: பழநி அருகே பச்சையாற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழநி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகள் மூலம் கிடைக்கிறது. மேற்கண்ட அணைகளுக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யும்போது ஓடைகள் மூலம் தண்ணீர் வருகிறது. மேலும் மலைப்பகுதியில் இருந்து வரும் நீரோடைகள் சிற்றாறுகளாகவும் பழநியில் ஓடுகின்றன. இதன்படி கொடைக்கானல் கூக்கால் பகுதியில் இருந்து ஓடைகள் மூலம் பழநி பச்சையாறுக்கு தண்ணீர் வருகிறது. பச்சையாறானது மலையடிவாரத்தில் உள்ள பொந்துப்புளி கிராமத்தில் தொடங்கி காவலப்பட்டி, இரவிமங்கலம் கிராமங்கள் வழியே பழநி சண்முகநதியில் கலக்கிறது. மழை காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் பச்சையாற்றில் நீர்வரத்து இருக்கும்
இந்த பச்சையாறு தண்ணீர் மூலம் காவலப்பட்டி, பொந்துப்புளி கிராம பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து உள்ளபோது சுற்று வட்டார கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதனால் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் தென்னை, மக்காச்சோளம், காய்கறி விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பச்சையாற்றில் மோட்டார் வைத்து சிலர் விவசாயத்துக்கு தண்ணீர் திருடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பச்சையாற்றில் நடைபெறும் இந்த தண்ணீர் திருட்டால் ஆற்றில் நீரோட்டம் குறைகிறது. விளைவு அங்கிருந்து குடிநீர் வினியோகம் பெறும் கிராமங்கள் பாதிப்பை சந்திக்கின்றன. அதேபோல் ஆற்றின் கடைசி பகுதிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே பச்சையாற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலப்பட்டி பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post பழநி அருகே பச்சையாற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.