ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடரை வென்றது இலங்கை

அம்பாந்தோட்டை: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மகிந்தா ராஜபக்ச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 22.2 ஓவரில் 116 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 23, இப்ராகிம் ஸத்ரன் 22, குல்பாதின் நயீப் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பரீத் அகமது 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் துஷ்மந்த சமீரா 4, ஹசரங்கா 3, லாஹிரு குமாரா 2, தீக்‌ஷனா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 50 ஓவரில் 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா, திமத் கருணரத்னே அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 84 ரன் சேர்த்தது. நிசங்கா 51 ரன் எடுத்து குல்பாதில் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

இலங்கை 16 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கருணரத்னே 56 ரன், குசால் மெண்டிஸ் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக துஷ்மந்தா சமீரா தேர்வு செய்யப்பட்டார்.

The post ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடரை வென்றது இலங்கை appeared first on Dinakaran.

Related Stories: