ஸ்மித் – ஹெட் பொறுப்பான ஆட்டம் ஆஸ்திரேலியா அபார ரன் குவிப்பு

லண்டன்: இந்திய அணியுடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், ஸ்டீவன் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அபாரமாக ரன் குவித்து வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இரு அணி வீரர்களும், ஒடிஷா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர்.

ஷமி, சிராஜ், உமேஷ், ஷர்துல், ஜடேஜா என இந்திய அணி பந்துவீச்சு கூட்டணி அமைந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அஷ்வினுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா இணைந்து ஆஸ்திரேலிய இன்னிங்சை தொடங்கினர். 10 பந்துகளை சந்தித்த கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பரத் வசம் பிடிபட்டார். அடுத்து வார்னருடன் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தனர். வார்னர் 43 ரன் எடுத்து (60 பந்து, 8 பவுண்டரி) ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்திருந்தது.

பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், லபுஷேன் 26 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டாக, ஆஸி. 76 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ஸ்மித் நிதானமாக கம்பெனி கொடுக்க, ஹெட் 60 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
ஸ்மித் 144 பந்தில் அரை சதம் அடிக்க, மறு முனையில் அபாரமாக விளையாடிய ஹெட் சதம் விளாசி அசத்தினார். 70 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்தது. ஹெட் 107 ரன், ஸ்மித் 72 ரன்னுடன் ரன் குவிப்பை தொடர, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோரை நோக்கி உறுதியுடன் நடை போட்டது.

The post ஸ்மித் – ஹெட் பொறுப்பான ஆட்டம் ஆஸ்திரேலியா அபார ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: