18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நெல்லை மாவட்டத்தில் திட்டக்குழு தேர்தல்

நெல்லை, ஜூன் 8: நெல்லை மாவட்டத்தில் 18 திட்டக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் திட்டக் குழுவிற்கு மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். திட்டக்குழுவை பொருத்தவரை ஊரக உள்ளாட்சிகளில் இருந்து 8 உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் இருந்து 10 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் ஊரக பகுதிக்கு மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 12 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

நகர்ப்புற பகுதிக்கு 10 பேரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு பேரூராட்சி உறுப்பினர்கள் 270 பேரும், நகராட்சி உறுப்பினர்கள் 69 பேரும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் 55 பேரும் வாக்களிப்பர். திட்டக் குழு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 10ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 12ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். போட்டி இருந்தால் இதற்கான தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறும். காலை 10 மணி முதல் 3 மணி வரை தேர்தல் நடத்தப்படும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்களுக்கு முதல் கூட்டம் ஜூன் 28ம் தேதி நடத்தப்படும்.

திட்டக் குழு தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக நெல்லை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஊரக பகுதிக்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு – 2) சந்திசேகரன், நகர்ப்புற பகுதிக்கு பாளை. மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை கலெக்டர் அலுவலக 3வது தளத்தில் சிறுசேமிப்பு பிரிவு அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

The post 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நெல்லை மாவட்டத்தில் திட்டக்குழு தேர்தல் appeared first on Dinakaran.

Related Stories: