முறப்பநாடு தாமிரபரணியில் அமலைசெடிகள் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

செய்துங்கநல்லூர், ஜூன் 8: முறப்பநாடு கைலாசநாதர் கோயில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில் புனித நீர் சாக்கடையாக மாறுவதால் அமலை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நவகயிலாய கோயில்களில் ஒன்றான முறப்பநாடு கைலாசநாதர் கோயில் முன்பு தாமிரபரணி ஆறு உள்ளது. காசிக்கு அடுத்து வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி பாயும் ஆறு இங்கு தான் உள்ளது. 2018ல் நடந்த தாமிரபரணி புஷ்கரணி நடந்த படித்துறை இங்கு தான் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது தாமிரபரணி ஆற்றில் முழுமையாக அமலை செடிகள் ஆக்கிரமித்து யாரும் குளிக்க முடியாத நிலையில் உள்ளது.

இதனால் இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது என வேதனை தெரிவிக்கும் பக்தர்கள் கைலாசநாதர் கோயில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றில் அதிகரித்து வரும் அமலை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனத்தலைவர் நெல்லை சுகன் கூறுகையில், ‘முறப்பநாடு கைலாசநாதர் கோயில் என்பது ஆன்மீக சிறப்பு பெற்ற பகுதியாகும். நவகயிலாய கோயில்களில் ஒன்று என்பதால் இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோயிலின் முன்பாகவே தாமிரபரணி ஆறு ஓடுவதால் புனித நீரான தாமிரபரணி ஆற்றுக்கு புனித நீர் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. குப்பைகள், அமலை செடிகளால் தண்ணீர் மாசு அடைந்து சாக்கடை நீர் போல துர்நாற்றம் வீசுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் உறை கிணறுகள் உள்ளன. இந்நிலையில், அனைத்து கிராமங்களுக்கும் அசுத்தமான குடிநீர் செல்வதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தி அமலை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.

The post முறப்பநாடு தாமிரபரணியில் அமலைசெடிகள் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: