சென்னையில் இருள் சூழ்ந்த பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக 11,000 தெரு மின்விளக்குகள்: நிர்பயா திட்டத்தில் ₹61 கோடியில் பணிகள் மும்முரம்

சென்னை, ஜூன் 8: நிர்பயா திட்டத்தின் கீழ், சென்னையில் இருள் சூழ்ந்த பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக 11 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் தற்போது 2,90,600 மின் விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மின்விளக்குகள் மின்சக்தி சேமிப்பு வகையிலான எல்.இ.டி விளக்குகள். இதன்மூலம் சுமார் 45% மின்சாரம் சேமிக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள சாலை சந்திப்புகளில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலும் 450க்கும் மேற்பட்ட உயர்மின் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது உள்ள தெரு விளக்குகள் எரிவதற்கு தேவையான மின்சக்தியின் அளவு 26.45 மெகாவாட் ஆகும். இதற்கு உண்டான மொத்த நுகர்வு செலவு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். தெருவிளக்குகள், சென்னை மாநகராட்சி கட்டிடங்கள், பூங்கா, விளையாட்டுத் திடல் மற்றும் மயான பூமியில் உள்ள விளக்குகளை சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது. இதற்கென 70 வாகனத்தில் ஹைட் ராலிக், அலுமினியம் ஏணிகள் தெரு மின்விளக்குகள் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னை மாநகராட்சியில் பல பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதாகியும், துருபிடித்தும் காணப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் தற்போது தெருவிளக்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மழைநீர் வடிகால் அமைக்கும் போது சுமார் 300க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அகற்றப்பட்டன. தற்போது அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 150 கி.மீ தூரத்திற்கு வயர் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல், சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக சென்னை மாநகராட்சி நிர்பயா திட்டத்தின் கீழ் சுமார் ரூ.61 கோடி மதிப்பீட்டில் 11,000 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 9,500 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1500 தெருவிளக்குகள் அடுத்த சில வாரங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

குறிப்பாக, சென்னையுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகள் எங்கெல்லாம் தெருவிளக்குகள் வேண்டும் என்பதை போலீசார் அடையாளம் கண்டு மாநகராட்சியிடம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இதை தவிர்த்து பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை ஆய்வு செய்து தேவைப்படுகிற பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கப்படுகிறது. இதனிடையே தற்போது நிலவரப்படி சென்னையில் பழைய மின்விளக்குகள் எங்குமே இல்லை, அவை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து சென்னை முழுவதும் எல்.இ.டி விளக்குகள் மட்டுமே உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகராட்சி செயல்படுத்தி வரும் திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.₹61 கோடி மதிப்பீட்டில் 11,000 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 9,500 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1500 தெருவிளக்குகள் அமைக்கும் பணி அடுத்த சில வாரங்களில் முடிவடையும்.

The post சென்னையில் இருள் சூழ்ந்த பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக 11,000 தெரு மின்விளக்குகள்: நிர்பயா திட்டத்தில் ₹61 கோடியில் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: