ஓசியில் டீ, ஜூஸ், பிரட் ஆம்லெட், கம்மர்கட் கேட்டு அடாவடி பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்: கடை உரிமையாளரை மிரட்டிய வீடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே டீ குடித்துவிட்டு பணம் கொடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ‘தினமும் ஜூஸ், பிரட் ஆம்லெட், ரெண்டு ரூவா கம்மர்கட் கொடுத்தா என்ன ஆகிடப்போவுது கொடுத்து விடுப்பா…’ என்று பெண் போலீசார் பேசும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி (40). இவர், கடந்த 3ம் தேதி இரவு படப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடன் ஏட்டு ஜெயமாலா (35), போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா (25), கவுசல்யா (25) ஆகிய 3 பேரும் இருந்துள்ளனர்.

அப்போது அங்கு, கீழ்படப்பை பகுதியை சேர்ந்த பாட்ஷா (எ) ரம்ஜான்அலி (45) என்பவரின் டீ கடையில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பெண் போலீசாரும், டீ குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். டீ கடை ஊழியர் பாட்ஷா, போலீசாரிடம் டீ குடித்ததற்கு பணம் கேட்டுள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, `போலீசாரிடமே டீ குடித்ததற்கு பணம் கேட்கிறாயா’ என கேட்டு கடைக்காரரை அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போலீஸ் வாகனத்தில் அமர்ந்துக்கொண்டு, பெண் போலீசார் ஐஸ்வர்யா, ஜெயமாலா மற்றும் கவுசல்யா ஆகியோரை கடைக்கு அனுப்பி வைத்து, ஜூஸ், பிரட் ஆம்லெட், தண்ணீர் கேன், சாக்லெட், கம்மர்கட் ஆகியவற்றை தினமும் இன்ஸ்பெக்டருக்கு கொடுக்க வேண்டும் என்று கூற சொல்லியுள்ளார்.

போலீசாரும் இதுபோல் கடைக்காரரிடம் கேட்டனர். அதற்கு கடை ஊழியர் பாட்ஷா மறுத்தார். உடனே, கடை ஓனரை போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டரை பார்க்க சொல் என பெண் போலீசார் மிரட்டி உள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடையின் உரிமையாளர் நாகர்கோவிலை சேர்ந்தவர். சென்னையில் கடை வைத்துள்ளார். இந்த நிலையில், டீகடை ஊழியர் இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையரக ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்பட 4 பெண் போலீசாரிடம், காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்தனர். இதில், டீ கடையில் டீ குடித்துவிட்டு, டீக்கடைக்காரருக்கு பணம் தர மறுத்து, 4 பேரும் சேர்ந்து டீ கடைக்காரரை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தலைமை காவலர் ஜெயமாலா, போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா, கவுசல்யா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

The post ஓசியில் டீ, ஜூஸ், பிரட் ஆம்லெட், கம்மர்கட் கேட்டு அடாவடி பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்: கடை உரிமையாளரை மிரட்டிய வீடியோ வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: