பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

சென்னை: பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன்; முத்தமிழறிஞர் கலைஞரை ஒரு கோணத்தில், ஒரு பரிமாணத்தில் பார்த்து விட முடியாது.

கலைஞர் அதிகார நுகர்வுக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல. தன் சமூக நீதி வேட்கைக்காக 14 வயதில் அரசியலுக்கு வந்தவர். பெரியார் கொள்கைகளை அண்ணா வழியில் கொண்டு சேர்த்தவர் கலைஞர். அண்ணா வழி என்றால் நெருப்பாற்றில் நீந்தி என்று அர்த்தம். இந்தியாவில் எந்த ஆட்சியாளர்களும் எண்ணிக்கூட பார்த்திடாத திட்டமான சமத்துவபுரங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் முழங்கிய தலைவர் கலைஞர். முதலமைச்சர் என்கிற நாற்காலியில் அமர்ந்துவிட்ட நிலையிலும் பெரியாரின் கனவை நனவாக்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தார் கலைஞர்.

கடல் தாண்டி சென்றாலும் கோயில் கருவறைக்குள் செல்ல முடியாத நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றுவதுதான் கலைஞரின் எண்ணம்; அதுவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம். இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்றால் சனாதன சக்திகள் வெளியே செல்ல வேண்டும்; பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும் இவ்வாறு கூறினார்.

The post பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: