சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்தில் 415 மீட்டர் சுரங்கம் தோண்டி வேணுகோபால் நகரை வந்தடைந்தது: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்தில் மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் கடந்த பிப்ரவரி 16 அன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கிய ‘ஆனைமலை’ என பெயரிடப்பட்ட இயந்திரம், 415 மீட்டர் சுரங்கம் தோண்டி வேணுகோபால் நகரை வந்தடைந்தது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ இரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 1 மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வழித்தடம் 3 (45.4 கி.மீ):
* மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை
* 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள்
• 28 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள்.

வழித்தடம் 4 (26.1 கி.மீ):
* கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை
* 18 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள்
* 9 சுரங்கப்பாதை இரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள்.

வழித்தடம் 5 (44.6 கி.மீ):
* மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை
* 39 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள்
* 6 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-II-ல் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் மூலம் வழித்தடம் 3, 4 மற்றும் 5-ல் சுரங்கப்பாதை பிரிவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலை (S-98) ஆஸ்திரேலிய நிறுவனமான Terratech ஆல் தயாரிக்கப்பட்டு, சீனாவிலிருந்து டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம் 3-ல் (Up line) மாதவரம் பால்பண்ணையில் பிப்ரவரி 16,2023 அன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 415 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று 07.06.2023 வேணுகோபால் நகரை வந்தடைந்தது. இதேபோல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சேர்வராயன் (S-99) வழித்தடம் 3-ல் (Down Line) மாதவரம் பால்பண்ணையில் மே 05, 2023 அன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 50 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு வேணுகோபால் நகரை ஆகஸ்டு 25, 2023 அன்று வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு). கூடுதல் பொது மேலாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி (சுரங்கப்பாதை), டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பார்வையிட்டனர்.

The post சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்தில் 415 மீட்டர் சுரங்கம் தோண்டி வேணுகோபால் நகரை வந்தடைந்தது: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: