உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

ஓவல்: உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பை போட்டி நடப்பதை போல, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டியை கடந்த 2019ல் ஐசிசி அறிமுகம் செய்தது. இதில் 9 அணிகள் பங்கேற்ற நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா – நியூசிலாந்து அணிகள் 2021 இறுதிப்போட்டியில் மோதின. சவுத்தாம்ப்டனில் நடவிபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியனானது.

அடுத்து 2021-23 சீசன்களில் நடந்த போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் முதல் 2 இடங்களைப் பிடித்தது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் சற்று முன் தொடங்கியது. இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் என ஒன்று இருந்தது. ஆனால், 2017ல் இருந்து இரு அணிகளுக்கும் இடையே நடந்த 4 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முடிவு கட்டியது. அதிலும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் உலக டெஸ்ட் சாம்பியனாகும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. ஒருநாள், டி20 உலக கோப்பைகளை அதிக முறை வென்ற அணியாக ஆஸி. இருக்கிறது. அதனால் டெஸ்ட் உலக கோப்பையிலும் கணக்கை தொடங்க துடித்துக் கொண்டு இருக்கிறது.

அதற்கு ஏற்ப அதிரடி வீரர்கள் வார்னர், ஸ்மித், கவாஜா, லபுஷேன், அலெக்ஸ், கிரீன், ஹெட் என அந்த அணியின் பேட்டிங் வரிசையும் மிரட்டலாகவே அமைந்துள்ளது. கம்மின்ஸ், ஸ்டார்க், போலண்ட், நெசர், லயன், மர்பி ஆகியோரின் பந்துவீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக இன்றைய போட்டியில் ஸ்ரீகர் பரத் களமிறங்கியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் உலகத்தின் நம்பர் 1 பவுலராக விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் 3.4 ஓவர்களில் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக உஸ்மான் க்வாஜாவை 0 ரங்களில் வெளியேற்றினார்.

The post உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! appeared first on Dinakaran.

Related Stories: