கட்டாக்: ஒடிசா விபத்தில் நிவாரணம் பெற வேண்டி தனது பிரிந்த கணவரை இறந்துவிட்டதாக கூறிய மனைவியின் மீது போலீசார் வழக்குபதிந்து அவரை தேடி வருகின்றனர். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்குவங்கம், ஆந்திரா போன்ற மாநில அரசுகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் மணியபந்தா கிராமத்தை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்ற பெண், தனது கணவர் பிஜய் தத்தா ரயில் விபத்தில் இறந்துவிட்டதாகவும், அதனால் அவருக்கான நிவாரண உதவித் தொகையை வழங்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அவர்கள் அந்தப் பெண்ணின் கணவர் ரயிலில் பயணம் செய்தாரா? என்பது உள்ளிட்ட ஆவணங்களை தணிக்கை செய்து வந்தனர். இதற்கிடையே அந்தப் பெண்ணின் கணவர், போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘நானும் எனது மனைவியும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். இந்த நிலையில் நான் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி, மாநில அரசிடம் நிவாரண நிதி கோரி விண்ணப்பித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். அதையடுத்து அந்தப் பெண் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது அந்த பெண், கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் குமார் ஜெனா கூறுகையில், ‘போலி பெயரில் நிவாரணம் கோரி யாராவது விண்ணப்பித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசு 5 லட்சம் ரூபாயும், ஒன்றிய அரசு 2 லட்சம் ரூபாயும், ரயில்வே சார்பில் ரூ. 10 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது’ என்றார்.
The post ரூ5 லட்சம் நிவாரணம் பெறுவதற்காக 13 ஆண்டுக்கு முன் பிரிந்த கணவரை இறந்துவிட்டதாக கூறிய மனைவி: ஒடிசா ரயில் விபத்தில் விநோத வழக்கு பதிவு appeared first on Dinakaran.