ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையம். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ரயில்வே வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தில் இருந்தும், ரயில்வே குடியிருப்புகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீரானது, ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் பெரிய கால்வாய் மூலம் திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகே உள்ள ஏலகிரி கிராம ஏரிக்கு சென்று கொண்டிருந்தது.

ஆனால், சாலையோரங்களில் கடைகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் ஆகியன கட்டப்பட்டுள்ளதால் பல வருடங்களாக கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலை ஓரத்திலேயே குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இந்த கழிவுநீரில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைக்கழிவுகள், பாட்டில்கள் ஆகியன தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரயில் நிலையம் வருபவர்களும், ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வர்களும் இங்குள்ள கழிவுநீர் கால்வாயை கடக்கும்போது முகம் சுளித்து செல்கின்றனர். இரவு நேரங்களில் பேருந்துக்காக நிற்கும் பொதுமக்களை கொசுக்கள் கடிப்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்தும், ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீரானது கால்வாயில் குளம்போல் தேங்கி நிற்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: