தோல்விக்கு பின் கைகுலுக்க மறுத்த எலினா; உக்ரைனுக்கு எதிரான போரை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை: பெலாரசின் சபலென்கா பேட்டி

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி போட்டியில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா- உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார். இதில் சபலென்கா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். வெற்றிக்கு பின் எலினாவுடன் கைகொடுக்க சபலென்கா சென்ற நிலையில், எலினா அதனை தவிர்த்து மைதானத்தைவிட்டு வெளியேறினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எலினா, சபலென்காவுக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார். இதேபோல் 4வது சுற்றில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்திய நிலையில் அவருக்கும் எலினா கைகொடுக்க மறுத்துவிட்டார். நேற்று வெற்றிக்கு பின் இது தொடர்பாக அரினா சபலென்கா கூறியதாவது: நான் போரை ஆதரிக்கவில்லை. நான் ஏற்கனவே பலமுறை இதனை சொல்விட்டேன். எனது நாடு எந்த மோதலிலும்(போர்) ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. நான் எந்த பக்கம் (போருக்கு எதிராக) நிற்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய பதில் உங்களிடம் உள்ளது.

விளையாட்டில் அரசியல் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. ஏனென்றால் நான் ஒரு டென்னிஸ் வீராங்கனை. அரசியலில் ஈடுபட விரும்பினால் நான் இங்கு இருக்கமாட்டேன். நான் எந்த அரசியலிலும் ஈடுபட விரும்பவில்லை. நான் ஒரு டென்னிஸ் வீராங்கனையாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். எலினா கூறுகையில், நான், எங்கள் நாட்டிற்கு எதிராக போரில் ஈடுபடும் வீராங்கனைகளுடன் கைகுலுக்க மாட்டேன் என தெளிவாக தெரிவித்துள்ளேன். ஆனால் சபலென்கா எதற்காக எனக்காக காத்திருந்தார் என தெரியவில்லை. ஆனால் ஒரு வீராங்கனையான அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், என்றார்.

The post தோல்விக்கு பின் கைகுலுக்க மறுத்த எலினா; உக்ரைனுக்கு எதிரான போரை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை: பெலாரசின் சபலென்கா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: