பள்ளிகள் திறப்பு அறிவிப்பு எதிரொலி காகித விலை அதிகரிப்பால் நோட்டுகள் விலை உயர்வு

கோவில்பட்டி : தொடர்ந்து அதிகரித்து வரும் காகித விலை உயர்வாலும், பள்ளிகள் திறப்பு அறிவிப்பு எதிரொலியாலும் நோட்டுகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 12 மற்றும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தேவையான புத்தகம், ஜியோமெட்ரி பாக்ஸ், நோட்டு, புத்தகப்பை, கலர் பென்சில், இலவச சீருடை என 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கவும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இரட்டை வரி நோட்டு, 4 வரி நோட்டு, கட்டுரை நோட்டு, கட்டம் போட்ட நோட்டு, டிராயிங் நோட்டு, ரூல்டு நோட்டு, அன்ரூல்டு நோட்டு என அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்நோட்டுகள் குறைந்த பக்கங்கள் மற்றும் அளவு சிறியதாக இருப்பதால் அதிக பக்கங்கள் மற்றும் லாங் சைஸ் நோட்டுகள் தனியார் புத்தகக்கடைகளில் தேவைக்கேற்றவாறு வாங்கி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக பேப்பர் விலை தொடர்ந்து அதிகரிப்பால் நோட்டுகள் விலை கடந்த ஆண்டை விட நோட்டு ஒன்றுக்கு ரூ.5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மெட்ரிக்., சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூல் செய்து அவர்களுக்கு தேவையான நோட்டுகளை வழங்குகின்றனர். எனவே அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தவும், பெற்றோருக்கு சுமையை குறைக்கவும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பக்கங்கள் கொண்ட நோட்டுகளை ஒரே கட்டமாக பள்ளி துவங்கும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post பள்ளிகள் திறப்பு அறிவிப்பு எதிரொலி காகித விலை அதிகரிப்பால் நோட்டுகள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: