நெல்லையில் ரூ.2.50 கோடியில் 10 நலவாழ்வு மையங்கள்

நெல்லை, ஜூன் 7: நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.50 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். இதையொட்டி நெல்லை பேட்டை சாஸ்திரி நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வஹாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நெல்லை மாவட்டத்தில் 18 நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டிட கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இதில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை 48வது வார்டு சாஸ்திரி நகர், பழைய பேட்டை 50வது வார்டு அம்பேத்கர் நகர், பாட்டப்பத்து 40வது வார்டு விஜயபுரி நகர், எம்.வி.புரம் 4வது வார்டு மேலிங்கப்புரம், கொக்கிரகுளம் 13வது வார்டு மேரி ஆர்டன் பள்ளி எதிர்புறம், சமாதானபுரம் 17வது வார்டு டிஎன்எச்பி காலனி, பாளையங்கோட்டை 21வது வார்டு சமதானபுரம் சமுதாயக்கூடம், பெரும்மாள்புரம் 19வது வார்டு தியாகராஜ நகர், மேலப்பாளையம் 36வது வார்டு பவுன்ட் ரோடு, மேலப்பாளையம் 34வது வார்டு ஆகிய 10 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு காணொலி காட்சி வாயிலாக நேற்று திறக்கப்பட்டது. இந்த நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் தலா ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக நெல்லை மாநகராட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 10 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த நகர்ப்புற நல வாழ்வு மைங்களில் கர்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தை கால சேவைகள், குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கான சேவை, குடும்ப நலம் கருத்தடை மற்றும் பேறுகால சேவை, தேசிய சுகாதார திட்டங்கள், பொதுவான தொற்றுநோய்களுக்கான சிகிச்சை, வெளிநோயாளிகள் சிறு நோய்களுக்கு சிகிச்சை, தொற்றாநோய்களுக்காக சிகிச்சை, மனநோய் கண்டறிந்து சிசிச்சை, கண், காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகளுக்கு சிசிச்சை, பல் நோய்களுக்கான சிசிச்சை, விபத்து மற்றும் அவசர மருத்துவ சிசிச்சை அளித்தல், யோகா பயிற்சி அளித்தல் ஆகிய சேவைகள் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும். இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் தலா ஒரு டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என 4 பேர் இந்த மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் டாக்டராக பணி நியமன ஆணை பெற்ற விஜயலட்சுமி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், ரவீந்தர், மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post நெல்லையில் ரூ.2.50 கோடியில் 10 நலவாழ்வு மையங்கள் appeared first on Dinakaran.

Related Stories: