பந்தை தலித் சிறுவன் எடுத்ததால் மாமாவின் கட்டை விரலை வெட்டிய கும்பல்: குஜராத்தில் கொடூரம்


காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் பந்தை எடுத்துப்போட்ட தலித் சிறுவனின் மாமாவின் கட்டை விரலை 7 பேர் கும்பல் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் ககோஷி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்று கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தலித் வகுப்பை சேர்ந்த சிறுவன், ஓடிச்சென்று அந்த பந்தை எடுத்து கொடுத்தான்.

இதனால் ஆத்திரமடைந்த பேட்டிங் செய்த சிறுவன், ‘‘தலித் வகுப்பைச் சேர்ந்த நீ, எப்படி நான் அடித்த பந்தை தொடலாம்” எனக் கேட்டு தகராறு செய்துள்ளான். மேலும், சிறுவன் சார்ந்த ஜாதியை சொல்லியும் அவன் திட்டியுள்ளான். இதை கவனித்த தலித் சிறுவனின் மாமா தீரஜ் பார்மர் அங்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிய சிறுவனை கடுமையாக கண்டித்து விட்டு தனது மருமகனை கையோடு அழைத்து சென்றார்.

அன்றைய தினம் இரவு 7 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் தீரஜ் பார்மரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்க தொடங்கியது. இதனை தடுக்க தீரஜின் தம்பியான கீர்த்தி முயன்ற போது அவரையும் சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், அவரை பிடித்து அவரது கட்டை விரலை துண்டாக வெட்டியது. அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் 7 பேர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

The post பந்தை தலித் சிறுவன் எடுத்ததால் மாமாவின் கட்டை விரலை வெட்டிய கும்பல்: குஜராத்தில் கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: