காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜூன் 11ல் தனிக்கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?..ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜூன் 11ல் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு கிளம்பி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. சச்சின் பைலட்டை அவ்வப்போது டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது.

கர்நாடகாவில் பெற்ற வெற்றியை ராஜஸ்தானில் பெற வேண்டும் என்பதற்காக அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனைகள் நடத்தியது. இந்த ஆலோசனைகளின் முடிவில் இருவரும் இணைந்தே தேர்தலை சந்திப்பது என அறிவித்தனர். ஆனாலும் முந்தைய வசுந்தரா ராஜே தலைமையில் நடந்த பா.ஜ அரசின் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட தனது கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாக பைலட் தெரிவித்தார். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சச்சின் பைலட் வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியை தொடங்க சச்சின் பைலட் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. வரும் ஜூன் 11ம் தேதி சச்சின் பைலட்டின் தந்தையும், மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம். அன்றைய தினம் தமது தனிக்கட்சி குறித்த அறிவிப்பை சச்சின் பைலட் வெளியிடக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 11ம் தேதி, தவுசாவில் தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு சச்சின் பைலட் அங்கு அஞ்சலி செலுத்துவார். இந்த ஆண்டு தனிக்கட்சி முடிவை அவர் அங்கு அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றி சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கூறுகையில்,’ காங்கிரஸ் தலைமையின் பதிலுக்காக சச்சின் காத்திருக்கிறார். இப்போது முடிவு அவர்கள் கைகளில் உள்ளது. இருப்பினும் சச்சின் கொள்கை அளவில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார். அது நிச்சயம் பதவிகளைப்பற்றியது அல்ல’என்றார்.

ராஜேஷ் பைலட்டின் நினைவு தின ஏற்பாடுகள் தவுசாவில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதை ராஜஸ்தான் வேளாண் விற்பனைத் துறை இணையமைச்சர் முராரி லால் மீனா மேற்பார்வையிட்டு வருகிறார். தனிக்கட்சி தொடர்பான செய்திகள் குறித்து அவர் கூறுகையில்,’ புதிய கட்சி பற்றிய ஊகங்கள் எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற ஊகங்களில் எந்தப் பொருளும் எனக்குத் தெரியவில்லை. கட்சியின் சித்தாந்தத்தைப் பின்பற்றி செயல்படுகிறோம்’ என்றார்.

The post காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜூன் 11ல் தனிக்கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்?..ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: