ஒப்பந்தத்தை மீறி ஓடிடியில் படம் கேரளாவில் இன்றும், நாளையும் தியேட்டர்கள் ஸ்டிரைக்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்றும், நாளையும் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கேரளாவில் தியேட்டர்களில் வெளியாகி 42 நாட்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் படத்தை வெளியிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தான் கடந்த சில வருடங்களாக ஓடிடியில் மலையாளப் படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் ஜூட் அந்தோணி இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், கலையரசன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த 2018 படம் வெளியானது. இந்தப் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது. தியேட்டர்களில் வெளியாகி 33 நாட்கள் மட்டுமே ஆகிறது. 42 நாட்கள் என்ற ஒப்பந்தத்தை மீறி இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட தீர்மானித்துள்ளதால் இதைக் கண்டித்து இன்றும், நாளையும் கேரளாவில் தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

The post ஒப்பந்தத்தை மீறி ஓடிடியில் படம் கேரளாவில் இன்றும், நாளையும் தியேட்டர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: