அரிச்சல்முனை பகுதியில் மர்மமாய் பறந்த ட்ரோன்: புலனாய்வுத்துறையினர் விசாரணை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் திட்டுப் பகுதியில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய ட்ரோன் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாதுகாப்பு துறை தொடர்புடைய நிறுவனங்கள், தகவல் சேகரிப்பு நிலையங்கள், இந்திய கடற்படை தளம் போன்ற முக்கியத்துவம் கொண்ட பகுதிகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை உள்ளது. இதுபோல் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ராமநாத சுவாமி கோயில் வளாகத்தின் மேல்பகுதி, தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளிலும் ட்ரோன் பறப்பதற்கு தடை உள்ளது. ஆனால் முறையான அனுமதி பெற்று கோயில் திருவிழா மற்றும் திருமணம் உள்ளிட்ட ஊர்வலங்களை ட்ரோன் கேமராக்கள் மூலம் படம் எடுக்கலாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை மற்றும் மணல் திட்டுப் பகுதியில் நீண்ட நேரம் பெரிய அளவிலான ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் பறந்ததால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் எங்கிருந்து இயக்கப்படுகிறது, யார் இயக்குவது என்பதை அங்கிருந்தவர்களால் அறிய முடியவில்லை. இச்சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post அரிச்சல்முனை பகுதியில் மர்மமாய் பறந்த ட்ரோன்: புலனாய்வுத்துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: