குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: நாகேஸ்வரன் கோயில், கும்பகோணம்

காலம்: இக்கோயிலின் கட்டுமானம் – முதலாம் ஆதித்த சோழனால் (பொ.ஆ.891-907) தொடங்கப்பட்டு முதலாம் பராந்தக சோழன் (பொ.ஆ.907-950) ஆட்சியில் முடிக்கப்பட்டது. கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் பிற்கால சோழர், பாண்டிய மற்றும் விஜய நகர நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களின் பல்வேறு மானியங்கள் மற்றும் பங்களிப்புகளைக் குறிப்பிடுகின்றன.

ஆரம்பகால சோழர்கால கோயில் கட்டிடக் கலையை அதன் சிறந்த வடிவில் இவ்வாலயத்தில் உள்ள பேரழகு மிக்க சிற்பங்களில் காணலாம். வீணாதர தட்சிணாமூர்த்தி, பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிற்பங்களில் வெளிப்படும் தெய்வீக அழகும், சிற்பஅமைதியும் வியப்பூட்டுகின்றன. கருவறையின் வெளிப்புறச் சுவரில், அழகான தோற்றத்துடன், நின்ற நிலையில் அலங்கரிக்கப்பட்ட ஆடை ஆபரணங்களுடன் அழகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அரச குடும்பம், இளவரசிகள் மற்றும் இளவரசர்களின் சிற்பங்களாக இருக்கலாம் அல்லது செல்வந்தர்கள், நன்கொடையாளர்களின் சிற்பங்களாக இருக்கலாம் என வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

நடராஜர் சந்நதி, இரு புறமும் இரண்டு குதிரைகள் இழுக்கும் தேர் வடிவில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அச்சில் சுழலக்கூடிய சக்கரம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. சக்கரத்தின் ஆரங்களில் 12 ராசிகளைக் குறிக்கும் கடவுள் சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளனர். பாடல் பெற்ற தலமான இவ்வாலய சிவன், ‘குடந்தைக் கீழ் கோட்டத்து கூத்தனார்’ என்று தேவாரப்பாடல்களில் குறிப்பிடப் படுகின்றார்.

“ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே”
– திருநாவுக்கரசர் / 6-ஆம் திருமுறை

சித்திரை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) அன்று கருவறையில் சூரியனின் கதிர்கள் நேரடியாக மூலஸ்தானத்தில் (குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர்) விழும் வகையில் கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.

Related Stories: