செகந்திராபாத்தில் எளிதாக பணம் சம்பாதிக்க குடும்பத்துடன் நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகள் கடத்தல்

*சில மணி நேரத்தில் விரட்டி பிடித்த போலீசார்

திருமலை : செகந்திராபாத்தில் எளிதாக பணம் சம்பாதிக்க நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகளை கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய்து, குழந்தைகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பலக் நுமாவைச் சேர்ந்தவர் ஷேக் இம்ரான்(36). நிஜாமாபாத்தைச் சேர்ந்த பர்வீன்(30). இருவரும் பழைய குற்றவாளிகள். இந்நிலையில், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், சுலபமாக பணம் சம்பாதிக்க முடிவு செய்து அதற்காக குழந்தைகளை கடத்தி ₹2 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டு வந்தனர்.

குல்பர்காவை சேர்ந்தவர் மேகராஜ் காலே(40), பலூன் வியாபாரி. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் தஞ்சம் புகுந்து மனைவி மற்றும் 7 குழந்தைகளுடன் செகந்திராபாத் பாரடைஸ் அருகே நடைபாதையில் வசித்து வருகிறார். மேகராஜ் வழக்கம்போல் சனிக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடைபாதையில் தூங்கினார்.

அப்போது ஷேக் இம்ரானும், பர்வீனும், மேகராஜின் குழந்தைகளில் ஒருவரை கடத்தி விற்க திட்டமிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் ஆட்டோவில் பாரடைஸ் சிக்னலுக்கு வந்தனர்.அப்போது, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மேகராஜின் மகள் கரிஷ்மாவை(3) அவர்கள் கடத்தி சென்றனர். பின்னர், சிறிது நேரத்தில் கண் விழித்து பார்த்த மேகராஜ், மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து மகான்காளி போலீசில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில், நகரம் முழுவதும் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது, கரிஷ்மாவை கடத்திய பிறகு, இம்ரானும், பர்வீனும் ஆட்டோவில் டேங்க் பண்ட் சென்று அங்கிருந்து பஷீர் பாக் வழியாக சுல்தான் பஜாரில் உள்ள ஹனுமான் தெக்டிக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள நடைபாதையில் மஹ்பூப் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் தூங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஆட்டோவை நிறுத்திய இம்ரான், பெற்றோருக்கு இடையே தூங்கி கொண்டிருந்த 7 மாதமான சிவக்குமார் என்ற குழந்தையை பர்வீன் கால்களை பிடித்து இழுத்து தூக்கி கொண்டு ஆட்டோவில் கடத்தி சென்றனர். இம்ரான் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து சிறிது தூரம் சென்றார்.

அதற்குள் பாரடைஸில் குழந்தை கடத்தல் புகாரால் உஷார்படுத்தப்பட்ட மகான்காலி போலீசார், கடத்தல்காரர்களின் ஆட்டோவை கண்டறிந்த சுல்தான் பஜார் போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், இம்ரான் மற்றும் பர்வீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இரு குழந்தைகளும் கடத்தப்பட்ட சில மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வடக்கு மண்டல துணை ஆணையர் சந்தன தீப்தி தெரிவித்தார்.

The post செகந்திராபாத்தில் எளிதாக பணம் சம்பாதிக்க குடும்பத்துடன் நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகள் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: