சிவாலயங்களில் நடைபெறும் முருகன் விழாக்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவாலயங்களில் சிவபெருமானுக்கே அன்றி அவரது பரிவார தெய்வங்களாக இருக்கும் விநாயகர், முருகன் போன்ற துணைத் தெய்வங்களுக்கும் தனியே சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக முருகனுக்கு அதிகளவிலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றை இங்கே சிந்திக்கலாம்.

கிருத்திகை

முருகனுக்கு மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில், அபிஷேக ஆராதனையோடு வீதியுலாவும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக சித்திரை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தைக் கிருத்திகை நாட்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் சிறப்பான வழிபாடுகளைச் செய்கின்றனர். இரவில் முருகன் இருபெரும் தேவியருடன் மயில் வாகனத்தில் வீதிஉலா வந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கந்தர்சஷ்டி

பெரிய ஆலயங்களில் ஐப்பசி மாதத்து வளர்பிறை சஷ்டியை ஒட்டி பெரிய விழா நடத்தப்படுகிறது. ஐப்பசி மாதப் பிரதமையில் கொடியேற்றி பஞ்சமியில் அன்னையிடம் வேல் வாங்கி சஷ்டியில் சூரசம்கார விழா நடத்துகின்றனர். இதில் பஞ்சமி வரையிலான முதல் ஐந்து நாட்கள் முருகன் வீதியுலா வருகிறார். அவருடன் வீரபாகு தேவர், விநாயகர், சுமந்தரீஸ்வரர் ஆகியோரும் பவனி வருகின்றனர். சஷ்டியன்று மாலையில் சூரசம்ஹாரமும், அடுத்த நாளான சப்தமியில் தெய்வானை முருகன் கல்யாணமும் நடத்தப்படுகின்றன. அஷ்டமி நவமியில் ஊஞ்சல் உற்சவமும் விடையாற்றி விழாவும் நடத்துகின்றனர். சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளும் போது முருகன், ஆட்டுக்கடா, அல்லது குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். சூரசம்ஹாரம் முடிந்ததும், அவரை மயில் வாகனத்தில் அமர்த்தி வீதியுலா காண்கின்றனர்.

பங்குனி உத்திரம்

சில தலங்களில் பங்குனி உத்திரத்தில் வள்ளிக்கும் முருகனுக்கும் திருமண விழா நடத்துகின்றனர். பங்குனி உத்திரத்தில் தண்டாயுதபாணிக்குச் சிறப்பு வழிபாடுகளும் வீதியுலாவும் நடத்தப்படுகின்றன.

வைகாசி விசாகம்

சண்முகர் உள்ள ஆலயங்களில் வைகாசி விசாகத்தில் சண்முகர் இந்திர விமானத்தில் பவனி வந்து காட்சி தருகிறார்.

வசந்த விழா

சிவாலயங்களில் பெருந்திருவிழா வினை அடுத்து நடைபெறும் வசந்த விழாவில் சிவபெருமானுக்கு வசந்தவிழா நடந்த பின்னர் முருகனுக்கெனத் தனியே வசந்த விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முருகனை பூஞ்சோலையின் நடுவே பூக்களைக் கட்டி அலங்கரித்த அழகான மண்டபத்தில் அமர்த்தி பன்னீரால் அபிஷேகித்து வெட்டிவேர், மருக்கொழுந்து, தவனம் முதலியவற்றால் அலங்கரித்து அவர்முன்பாக ஆடல் பாடல்களை நிகழ்த்துவர் குளிர்ச்சி தரும் நீர்மோர் பானகம் முதலியவை நிவேதிக்கப்படும். தயிர் சாதமும் நிவேதிப்பர். வெள்ளரிப் பிஞ்சுகளை நறுக்கித் தயிரில் இட்டு அளிப்பதும் உண்டு. வசந்த விழாவில் இன்னிசைக் கச்சேரிகளும், ஆடல்பாடல்களும் தனிச்சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

நவராத்திரி விழாவிற்கு அடுத்தபடியாக பெரிய அளவில் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் விழாவாக வசந்த விழா நடத்தப் படுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சிங்காரவேலரின் வசந்தவிழா தனிச்சிறப்பு கொண்டதாகும். செயற்கையாக நீராழி மண்டபத்துடன் கூடிய சிறிய குளத்தை அமைத்து அதில் நீர் நிரப்புகின்றனர். அதில் சிறிய தெப்பம் சுற்றி வருகிறது. குளத்தைச் சுற்றி பூந்தொட்டிகளை வைத்து பூஞ்சோலை அமைப்பை உருவாக்குகின்றனர். முருகன் இதை ஏழுமுறை சுற்றி வருகிறார்.

அப்படிச் சுற்றிவரும் வேளையில் ஒவ்வொரு சுற்றிலும் முறையே வேத பாராயணம், திருமுறை ஓதுதல், நாதஸ்வரம், கிளாரினெட், சங்கநாதம், முகவீணை முதலியன இசைக்கப்படுகின்றன. பெரிய நிலைக்கண்ணாடியை வைத்து அதன் முன்பாக முருகனை நிறுத்தி தீபாராதனை செய்யப்படுகிறது. வசந்தவிழா மகிழ்ச்சியின் அடையாள விழாவாகும்.

தெப்போற்சவம்

சிவாலயங்களில் நடைபெறும் தெப்போற்சவத்தின் தொடர்ச்சியாக முருகனுக்கும் தெப்போற் சவம் நடத்தும் வழக்கமும் உள்ளது. சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச நாளை ஒட்டி மூன்று நாட்கள் நடைபெறும் தெப்போற்சவத்தில் முதல் நாள் கபாலீஸ்வரரும் இரண்டு மூன்று ஆகிய நாட்களில் வள்ளி தெய்வயானை உடனாய சிங்காரவேலரும் பவனிவந்து அருள்பாலிக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் தெப்பத்திரு விழாவில் முதல் நாள் விநாயகரும், கிராம தேவதையும், இரண்டாம் நாளில் சந்திர சேகரரும் மூன்றாம் நாளில் முருகப்பெருமானும், நான்காம் நாள் பெருமாளும் தெப்பத்தில் உலா வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவினைத் தொடர்ந்து நடைபெறும் தெப்பத்திருவிழாவில் முதல் நாளில் அண்ணாமலையாரும் இரண்டாம் நாளில் பராசக்தி அம்மனும், மூன்றாம் நாளில் முருகனும் தெப்பத்தில் உலா வருகின்றனர்.

வனபோஜன உற்சவம்

பெருங்கோயில்களில் சிறப்பாக நடைபெற்று வந்து நின்றுபோன விழாக்களில் ஒன்று வனபோஜன உற்சவமாகும். ஆலயங்களில் உள்ள முதன்மைத் தெய்வவடிவை நன்கு அலங்கரித்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு காலையில் எடுத்துச்சென்று அங்குள்ள மண்டபத்தில் வைப்பர். நண்பகலில் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு நிவேதனங்களும் நிவேதிக்கப்படும். இதில் சித்ரான்னங்கள் எனப்படும் புளியஞ்சாதம், எள்ளுசாதம், எலுமிச்சம் சாதம், பருப்புசாதம், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், சம்பாசாதம் எனப்படும்.

மிளகுசாதம், தேங்காய்சாதம் எனப் பல வகையான சாதவகைகளும் (அன்ன வகைகளும்) வடை, முறுக்கு, போன்றவைகளும் நிவேதிக்கப் படும். மக்களும், அவரவர் வீட்டில் இருந்து கட்டு சாதங்களோடு தின்பண்டங்களை எடுத்து வந்து உண்பதோடு மற்றவர்களுக்கும் அளிக்கின்றனர். வனத்தின் நடுவே விதவிதமான உணவுகளை இறைவனோடு சேர்த்து அருந்தி அந்த நாள் மகிழ்வுடன் கழிப்பதே வனபோ ஜன உற்சவத்தின் நோக்கமாகும். இதனைத் தமிழில் உண்டாட்டு விழா என்பர். மகாபாரதத்தில் இந்த உண்டாட்டு விழா பற்றிய செய்திகள் அனேகம் உள்ளன.

பெருந்திருவிழாவில் முருகன் பவனி

சிவாலயப்பெருந்திருவிழாவின் போது, நாள் தோறும் நடைபெறும் வீதி உலாவில் பஞ்சமூர்த்திகளில் ஒருவராக முருகன் தன் தேவியருடன் எழுந்தருள்கிறார். அப்போது அவர் எழுந்தருள்கின்றார். அப்போது அவர் மயில் தவிர மான், புலி, யானை, அன்னம், புருஷா மிருகம், கந்தர்வன், சிங்கம், தாரகாசுரன் முதலான வாகனங்களிலும் தேரிலும் பவனி வந்து அருள்பாலிக்கிறார். மேலும், அன்பர்கள் தேவைப்படும் போது முருகனுக்கு லட்சார்ச்சனை, ஷண்முகார்ச்சனை கோடி அர்ச்சனை போன்றவற்றைச் செய்து மகிழ்கின்றனர். சில தலங்களில் சத்ருசம்ஹார திரிசதி, சகஸ்ர நாம அர்ச்சனை போன்றவை அடிக்கடி நடத்தப்படுகின்றன. அன்பர்கள் கொண்டாடும் செல்லப் பிள்ளையாக முருகன் இருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

வள்ளலார் போற்றிய ஜோதிமுருகன்

அருட்பிரகாச வள்ளலார் என்று அன்பர்களால் போற்றப்படும் ஜோதி ராமலிங்க சுவாமிகள். இளமைக்காலத்தில் சென்னையில் வசித்துவந்த போது, நாள்தோறும் திருவொற்றியூர் சென்று படம்பக்கநாதரையும் வடிவுடை நாயகியையும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் படம் பக்கநாதர் ஆலயத்தில் பிராகாரத்தில் பரிவார மூர்த்தியாக விளங்கும் முருகனைப் போற்றி வழிபட்டார். அந்த முருகனுக்கு அருட்ஜோதி முருகன் என்பது பெயராகும்.

இந்த முருகனை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர் போன்றவர்கள் பெரிதும் போற்றிப் பாடியுள்ளனர். இக்கோயிலின் கொடி மரத்திற்கு அருகில் கோபுர எதிர்கொள் முருகனான கல்யாண முருகனைக் காண்கிறோம். தனித் தமிழ் கண்டவரான மறைமலை அடிகள் தனக்கு ஏற்பட்ட கொடிய வயிற்றுவலியை இம்முருகன் அருளால் தீர்த்ததாகவும், அதற்காக இம்முருகன் மீது திருஒற்றியூர் முருகன் மும்மணிக்கோவை என்னும் நூலைப் பாடியதாகவும் குறித்துள்ளார்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

The post சிவாலயங்களில் நடைபெறும் முருகன் விழாக்கள் appeared first on Dinakaran.

Related Stories: