வலங்கைமான், ஜூன் 6: பருவம் தவறி பெய்த மழையால் பருத்தி சாகுபடியில் போதிய வளர்ச்சி இல்லை என்பதால், வலங்கைமான் பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்தாண்டு 8,950 எக்டேரில் சம்பாவும், 4 ஆயிரம் எக்டேரில் குறுவை அறுவடைக்கு பின் மேற்கொள்ளக்கூடிய தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
நெல் அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக வலங்கைமான் மற்றும் ஆதிச்சமங்கலம் , சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 8,250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல், மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால் பருத்தி சாகுபடி இந்த ஆண்டும் கூடுதலாக நடைபெற்றது .கடந்த ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்வதற்காக விதைக்கும் பணி மேற்கொள்ளும் வகையில் போதிய இடைவெளியில் சிறிய அளவிலான பாத்திகள் அமைத்து, பருத்தி விதையை விதைத்து வந்தனர். இந்நிலையில் நடப்பு பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் வயலில் புழுதி உழவு செய்தும், சில இடங்களில் சேர்த்து உழவு செய்தும் பின்னர் பருத்தி விதையை விதைத்தனர்.
இந்நிலையில் வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோடை மழை பருவமழை போல பெய்தது. இதனால் 2 நாட்களுக்கு மேல் வயலில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாடல் நோய் ஏற்பட்டு பருத்தி பல இடங்களில் பாதிக்கப்பட்டது. பொதுவாக பருத்தி விதைத்த நாள் முதல் 60 நாட்களுக்கு உள்ளாகவே செடியின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக இருக்கும். அந்த காலகட்டங்களில் செடிகளுக்கு உரம் இடுதல், மண் கிளறுதல், பருத்தி செடிகளை சுற்றி மண் அணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, பருத்தி செடிகளுக்கு உரமிடுதல் மற்றும் மண் கிளறுதல் போன்ற பணிகளை உரிய நேரத்தில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது .
வலங்கைமான் தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட மொத்த பருத்தியில் சுமார் 20 சதவீத அளவிற்கு பருத்தி செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து வீராணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பருத்தி செடிகளை வைத்து உழவு செய்யப்பட்டு நடவு பணிகள் முன் பட்ட குறுவையாக மேலும் சுமார் 40 சதவீத அளவிற்கு பருப்பு செடிகள் போதிய வளர்ச்சி இன்றியும் செடிகள் பாதிக்கப்பட்டும் உரிய மகசூல் பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையிலேயே உள்ளது .
சுமார் 50 சதவீத பருத்தி செடிகள் மட்டுமே ஓரளவு சுமாராக உள்ளது. இந்தாண்டு ஆர்வத்துடன் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பருவம் தவறி பெய்த மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் வழக்கத்தை விட கூடுதலாக செலவு செய்து உள்ள நிலையில், போதிய வளர்ச்சி இல்லாத சூழலில் பருத்தி விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post பருவம் தவறி பெய்த மழையால் பருத்தி செடிகள் போதிய வளர்ச்சி இல்லை appeared first on Dinakaran.