திருமயம் அருகே பில்லமங்கலம் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்

திருமயம்,ஜூன்6: திருமயம் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் இளைஞர்கள் உற்சாகத்துடன் மீன் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் கண்மாயில் உள்ள நீர் இருப்பை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட கண்மாய் கிராமத்தார்கள் தனிநபருக்கு குத்தகை விட்டு மீன்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில் விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்திய பிறகு கண்மாயில் மீதமிருந்த நீரும் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக நீர் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கண்மாய் குத்தகை எடுத்து மீன் வளர்த்து வந்த நபர்கள் கண்மாயில் மீன்பிடித் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. முன்னதாக சமூக வலைதளங்கள், மைக் செட் மூலம் மீன்பிடித் திருவிழா குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, பள்ளத்தூர், கானடுகாத்தான், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று பில்லமங்கலம் பெரிய கண்மாயில் ஊத்தா, கச்சா வலைகளுடன் குவிந்தனர். இந்நிலையில் ஊத்தா எனும் மீன்பிடி கருவி வைத்திருந்த ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.200 பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு டோக்கன் பெற்றுக் கொண்ட நபர்கள் கண்மாயின் ஒரு பகுதியில் ஊத்தவுடன் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சரியாக காலை 9 மணி அளவில் மீன் பிடிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து டோக்கன் பெற்றுக் கொண்டு மீன்பிடிக்க ஊத்த, கச்சா வலைகளுடன் தயாராக இருந்த இளைஞர்கள் கண்மாய்க்குள் உள்ள மீன்களைப் பிடிக்க ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மீன் பிடிக்க வந்த அனைவரும் கண்மாய்க்குள் இறங்கி கலக்கி ஊத்தா உதவியுடன் மீனை பிடித்தனர். அவ்வாறு பிடித்ததில் விரால், ரோகு, கட்லா, குறவை, ஜிலேபி உள்ளிட்ட மீன் வகைகள் பிடிபட்டன. இது போன்ற விழாக்களில் அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத பாகுபாடு இன்றி கலந்து கொள்வதால் இந்திருவிழா திருமயம், பொன்னமராதி பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

The post திருமயம் அருகே பில்லமங்கலம் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: