இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்

காரைக்கால்,ஜூன்6: இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தி உள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் வரும் ஜூன் 14ம் தேதி கோடை விடுமுறை முடிந்து துவங்க உள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நிலை குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் புதுச்சேரி போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு பள்ளி பேருந்துகளின் உறுதி தன்மை, போதுமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என்று குறித்து ஆய்வு மேற்கொண்டார். தனியார் பள்ளி வாகனங்கள் மாணவர்கள் பயணிக்க பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அமைச்சர் சந்திர பிரியங்கா வாகனங்களில் ஒட்டினார். அப்போது, போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பேருந்துகள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். காரைக்கால் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் இயங்குவதால் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து துறை மூலம் அதிகாரிகள் அடிக்கடி வாகனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். தனியார் பேருந்துகளில் மாணவர்கள் அதிகம் பயணிப்பதால் தனியார் பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தனியார் வாகனங்கள் மீது ஏதேனும் தவறுகள் இருந்தால் பஸ் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுகுமார், துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் (வருவாய்), எஸ்.பி.சுப்ரமணியன், வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன், மற்றும் போக்குவரத்து துணை ஆய்வாளர் கல்விமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: